திண்டுக்கல்லில் பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம்


திண்டுக்கல்லில் பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 18 Jan 2017 3:45 AM IST (Updated: 18 Jan 2017 2:24 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் விடிய, விடிய போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் பீட்டா அமைப்பை தடை செய்யவும் வலியுறுத்தி உள்ளனர். மாணவர்கள் போராட்டம் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்கக்கோரி தமிழகம் மு

திண்டுக்கல்

திண்டுக்கல்லில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் விடிய, விடிய போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் பீட்டா அமைப்பை தடை செய்யவும் வலியுறுத்தி உள்ளனர்.

மாணவர்கள் போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. மதுரை, சென்னை உள்பட பல இடங்களிலும் விடிய, விடிய போராட்டம் நடத்தப்பட்டது. திண்டுக்கல்லிலும் ஜல்லிக்கட்டுக்கான தடைக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி திண்டுக்கல் கல்லறைத்தோட்டம் பகுதியில் அறப்போராட்டம் நடத்த ‘பேஸ்புக்’, ‘வாட்ஸ்அப்’ போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் அழைப்பு விடுத்தனர். அவர்கள் மாலை 5 மணி முதல் விடிய, விடிய போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

இதையொட்டி நேற்று மாலையில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் சிகாமணி, கோபால் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் தெய்வம், கதிரவன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

கூட்டம் குவிந்தது

இதற்கிடையே மாலை 5 மணி ஆனதும், மாவட்டம் முழுவதும் இருந்து மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கல்லறை தோட்டம் பகுதியில் திரள தொடங்கினர். சிறிது நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர்.

அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு உடனே அனுமதி வழங்க வேண்டும். இதற்காக மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம்போட்டனர். நேரம் ஆக, ஆக கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் சுமார் 500 பேர் அங்கு திரண்டனர். இதில் மாணவிகள், சிறுமிகளும் பங்கேற்றனர்.

முன்னதாக, இரவு 7 மணி அளவில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லும்படி போலீசார் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தனர். ஆனால், கூடுதலாக ஒரு மணி நேரம் அனுமதி வழங்கும்படி போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக்கொண்டனர். அதன்படி போலீசார் கூடுதலாக ஒரு மணி நேரம் அனுமதி வழங்கினர்.

இரவில் தொடர்ந்தது

ஆனால், 8 மணி ஆன பிறகும் மாணவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. அவர்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் விடிய, விடிய போராட்டத்தை தொடரப்போவதாக தெரிவித்தனர். அதன்படி போராட்டத்தை தொடர்ந்தனர். இதில், பங்கேற்றவர்கள் மத்திய அரசு மற்றும் பீட்டாவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி இருந்தனர். இரவில் தொடர்ந்து போராட்டம் நடந்தது.

முன்னதாக, போராட்டக்காரர்கள் கூறும்போது, ‘ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரியம். அதை நடத்தியே ஆகவேண்டும். இதற்கு மத்திய அரசு அவசர சட்டம் நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசு வேடிக்கை பார்க்காமல், மக்களின் உணர்வுகளை மத்திய அரசிடம் முறையாக கொண்டு சேர்க்க வேண்டும். தமிழர்களின் உணர்வுகளையும், பாரம்பரியத்தையும் பந்தாடிய பீட்டா அமைப்பை உடனே தடை செய்ய வேண்டும்’ என்றனர்.


Next Story