வாடிப்பட்டி அருகே அரசு பஸ்கள் கண்ணாடி உடைப்பு; மறியல் போராட்டம்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைக்கட்டி–பாலமேடு சாலையில் கெங்கமுத்தூரை சேர்ந்த 50 பேர் ஜல்லிக்கட்டு தடையை நீக்ககோரி சாலைமறியல் போராட்டம் செய்தனர். தகவலறிந்த வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினா
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைக்கட்டி–பாலமேடு சாலையில் கெங்கமுத்தூரை சேர்ந்த 50 பேர் ஜல்லிக்கட்டு தடையை நீக்ககோரி சாலைமறியல் போராட்டம் செய்தனர். தகவலறிந்த வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின்னர் போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இதனால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதேபோல் சமயநல்லூர் பஸ்நிறுத்தம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு மேற்கு ஒன்றிய செயலாளர் பகவத்சிங் தலைமையில் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரியும் அவசர சட்டம் கொண்டு வரகோரியும் பஸ் மறியல் போராட்டம் நடந்தது. தகவலறிந்த சமயநல்லூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜெயமணி போராட்டம் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபின் பஸ் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்தநிலையில் நேற்றிரவு 7 மணி முதல் 8 மணிக்குள் தனிச்சியத்தில் அலங்காநல்லூர் பிரிவில் அரசு பஸ்கள் திருப்பூரில் இருந்து மதுரைநோக்கியும், தாராபுரத்திலிருந்து மதுரைக்கு வந்த பஸ், கோவையில் இருந்து மதுரை வந்த பஸ் என 3 பஸ்களின் பின்புற கண்ணாடிகளை கல் கொண்டு எறிந்து உடைக்கப்பட்டன. அதேபோல் அய்யங்கோட்டையில் மதுரையில் இருந்து கோவைக்கு சென்ற அரசு பஸ் மீதும் கல் எறிந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.