தனுஷ்கோடி கடற்கரையில் 145 முட்டைகள் இட்ட ஆமை வனத்துறையினர் மீட்டனர்


தனுஷ்கோடி கடற்கரையில் 145 முட்டைகள் இட்ட ஆமை வனத்துறையினர் மீட்டனர்
x
தினத்தந்தி 18 Jan 2017 3:15 AM IST (Updated: 18 Jan 2017 2:25 AM IST)
t-max-icont-min-icon

தனுஷ்கோடி கடற்கரையில் ஆமை ஒன்று 145 முட்டைகளை இட்டு சென்றது. அதனை வனத்துறையினர் கைப்பற்றி குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைத்தனர். ஆமை முட்டைகள் ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பச்சைஆமை, அழுங்காமை, பெருந்தலை ஆமை, தோணி ஆமை என பல வ

ராமேசுவரம்,

தனுஷ்கோடி கடற்கரையில் ஆமை ஒன்று 145 முட்டைகளை இட்டு சென்றது. அதனை வனத்துறையினர் கைப்பற்றி குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.

ஆமை முட்டைகள்

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பச்சைஆமை, அழுங்காமை, பெருந்தலை ஆமை, தோணி ஆமை என பல வகை கடல் ஆமைகள் உள்ளன. இந்த ஆமைகள் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலும் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். மேலும் ஆமைகள் முட்டையிட்டு செல்ல மணல் பாங்குடன்கூடிய உகந்த பகுதியாக தனுஷ்கோடி கடற்கரை பகுதி உள்ளது. எனவே மற்ற பகுதிகளை விட, இங்கு ஆமை முட்டைகள் அதிக அளவில் கிடைக்கும்.

தற்போது ஆமை முட்டையிடும் காலம் என்பதால், கடற்பகுதியில் வன உயிரின அதிகாரிகள் தொடர் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் ஆய்வில் கிடைக்கும் முட்டைகளை சேகரித்து அதனை குஞ்சு பொரிக்க வைத்து பின்னர் அந்த ஆமைகளையும் கடலில் விட்டு விடுவார்கள்.

தடயங்கள்

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் மண்டபம் வனச்சரகர் சதீஷ் தலைமையில் வனத் துறையினரும், வேட்டை தடுப்பு காவலர்களும் இணைந்து கடற்கரைகளில் ஆய்வு செய்து வந்தனர். அப்போது முகுந்தராயர்சத்திரம் கடற்கரை அருகே ஒரு இடத்தில் ஆமை ஒன்று வந்து சென்றுள்ளதற்கான தடயங்கள் இருந்துள்ளதை பார்த்தனர். பின்பு அந்த இடத்தை தோண்டி பார்த்த போது கடற்கரை மணலில் 145 ஆமை முட்டைகள் இருப்பதும் தெரிய வந்தது. மேலும் முட்டையிட்ட அந்த ஆமை மீண்டும் கடலுக்கு சென்று விட்டதற்கான தடயமும் கிடைத்தது.

எனவே இதைத்தொடர்ந்து அந்த 145 முட்டைகளையும், கடற்கரையிலேயே வனத்துறையினர் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள குஞ்சு பொரிப்பக மையத்தில் பாதுகாப்பாக மணலில் புதைத்து வைத்தனர்.

535 முட்டைகள்

இது குறித்து வனச்சரகர் சதீஷ் கூறியதாவது:–

கடற்கடையில் கிடைத்துள்ள 145 ஆமை முட்டைகளை சேகரித்து முகுந்தராயர்சத்திரம் கடற்கரையிலேயே வனத்துறையின் மூலம் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ஆமை முட்டை குஞ்சு பொரிப்பக மைய கடற்கரை மணலில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 13–ந் தேதி முதல் ஜனவரி 17–ந் தேதி (நேற்று) வரையிலும் தனுஷ்கோடி கடற்கரையில் பல இடங்களில் ஆமை இட்டு சென்ற மொத்தம் 535 முட்டைகள் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு குஞ்சு பொரிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளன.

பொதுவாக ஆமை முட்டையிட்ட நாட்களில் இருந்து 50 முதல் 55 நாட்களுக்குள் முட்டையில் இருந்து குஞ்சு தானாகவே வெளியே வந்து விடும். குஞ்சு பொரிப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள முட்டையில் இருந்து ஆமை குஞ்சுகள் வெளியே வந்த பின்பு அந்த குஞ்சுகள் அனைத்தும் கடலில் விடப்படும்.

சிறையில் அடைப்போம்

அது போல் ஆமைகள் இரவில் இருந்து அதிகாலை வரையிலும் மட்டுமே முட்டையிட கடற்கரை பகுதிக்கு வரும். அதனால் இரவு நேரங்களில் மீனவர்கள் யாரும் கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம். ஆமைகள் இனப்பெருக்கத்திற்கு மீனவர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கடற்கரை பகுதியில் ஆமை வந்த தடயங்கள் இருந்தால் மீனவர்கள் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

கடற் கரையில் ஆமைகள் இட்டு செல்லும் முட்டைகளை யாரும் கைப்பற்ற முயன்றால் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story