ஈரோடு வீரப்பன்சத்திரம் தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்


ஈரோடு வீரப்பன்சத்திரம் தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
x
தினத்தந்தி 18 Jan 2017 3:00 AM IST (Updated: 18 Jan 2017 2:25 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு வீரப்பன்சத்திரம் தெப்பக்குளத்தில் மீன்கள் செத்து மிதந்தன.

ஈரோடு,

ஈரோடு வீரப்பன்சத்திரம் தெப்பக்குளத்தில் மீன்கள் செத்து மிதந்தன.

தெப்பக்குளம்

ஈரோடு வீரப்பன்சத்திரம் தெப்பகுளத்தில் உள்ள தண்ணீரை பல ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் தெப்பக்குளத்தில் தண்ணீர் குறைந்ததால் பொதுமக்கள் தெப்பக்குளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த ஆண்டு மழை பொய்த்துபோனதால் தெப்பக்குளத்தில் தண்ணீர் மிகவும் குறைந்தது. மேலும், தெப்பக்குளத்தில் உள்ள சிறிதளவு தண்ணீரிலும் குப்பைகள் கிடப்பதாலும், தண்ணீர் மாசுபட்டு இருப்பதாலும் மீன்கள் செத்து மிதக்கின்றன. நேற்று 50–க்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதந்ததால் தெப்பகுளத்தில் துர்நாற்றம் வீசியது.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:–

காவிரி தண்ணீர்

தெப்பக்குளத்தை சுற்றிலும் ஏராளமான குடியிருப்பு பகுதிகள் உள்ளன. தெப்பக்குளத்தில் உள்ள சிறிதளவு தண்ணீரும் பாசி படர்ந்து பச்சை நிறத்தில் உள்ளது. மேலும், தண்ணீரில் ஆங்காங்கே பிளாஸ்டிக் கழிவுகள் மிதக்கின்றன. தெப்பக்குளத்தின் நடுவில் கிணறு ஒன்று உள்ளது. இதனால் மழை பெய்யும்போது கிணற்றில் ஊற்று ஏற்படும்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான வறட்சி ஏற்பட்டதால் காவிரி குடிநீரை தெப்பக்குளத்தில் விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதனால் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும்போது தெப்பக்குளத்திற்கும் தண்ணீர் வரும். இதனால் தெப்பக்குளம் வறண்டுவிடாமல் பாதுகாக்கப்பட்டு வந்தது.

செத்து மிதக்கும் மீன்கள்

கோடை காலத்தில் தண்ணீர் குறைவாக இருந்தாலும், தெப்பக்குளத்தின் நடுவில் உள்ள கிணற்றில் நீர் இருக்கும்போது மீன்கள் உயிர் பிழைத்துக்கொள்ளும். ஆனால் தற்போது குறைவான தண்ணீரும் மாசுபட்டு கிடப்பதால் மீன்கள் செத்து மிதக்கின்றன. ஆயிரக்கணக்கான மீன்கள் தெப்பக்குளத்தில் உள்ளன. எனவே மீன்களின் இறப்பை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தெப்பக்குளத்தில் இருந்து மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தெப்பக்குளத்திற்கு அருகில் உள்ள வீடுகளில் இருக்க முடிவதில்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகள் தெப்பக்குளத்தை பார்வையிட்டு சுத்தப்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story