அலங்காநல்லூரில் மாணவர்கள்–பொதுமக்கள் கைதுக்கு எதிர்ப்பு ஈரோட்டில் அன்னியநாட்டு குளிர்பானத்தை ரோட்டில் ஊற்றி போராட்டம்
அலங்காநல்லூரில் மாணவர்கள் –பொதுமக்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்னிய நாட்டு குளிர்பானத்தை ரோட்டில் ஊற்றி போராட்டம்
தமிழ்நாடு முழுவதும் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வேண்டும். பீட்டா அமைப்பினை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகின்றன. பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே பல்வேறு மாவட்டங்களிலும் இளைஞர்கள், மாணவ–மாணவிகள், பொதுமக்கள் திரண்டு ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் அலங்காநல்லூரில் திரண்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்களை போலீசார் கைது செய்தனர். இதற்கு தமிழ்நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
ஈரோட்டில் வீரத்தமிழர் படை என்ற அமைப்பு சார்பில் நேற்று திடீர் போராட்டம் நடத்தப்பட்டது. 500–க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள், இளம்பெண்கள் நேற்று பகல் 12 மணி அளவில் காளைமாடு சிலை பகுதியில் கூடத்தொடங்கினார்கள். பின்னர் அவர்கள் பழைய ரெயில் நிலையம் ரோடு பகுதியில் ஒருங்கிணைந்தனர். அங்கிருந்து ஊர்வலமாக மீண்டும் காளைமாடு சிலை பகுதிக்கு வந்தனர். அங்கு அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டு உள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
ஆதரவு அளிக்க வேண்டும்போராட்டத்தின் போது அன்னிய குளிர்பான நிறுவனங்களின் குளிர்பானத்தை ரோட்டில் கொட்டி அழித்தனர். பின்னர் மீண்டும் ஊர்வலமாக புறப்பட்ட அவர்கள் பழைய ரெயில் நிலையம் ரோட்டில் உள்ள கருப்பண்ணசாமி–மதுரை வீரன் கோவிலுக்கு முன்பு தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பகல் 2 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை 5 மணி வரை நீடித்தது.
போராட்டம் குறித்து ராகவ் என்ற வாலிபர் கூறும்போது, ‘ஜல்லிக்கட்டு வேண்டும் என்று நடைபெறும் அனைத்து போராட்டங்களிலும் நாங்கள் கலந்து கொண்டு வருகிறோம். அலங்காநல்லூருக்கு செல்லும் வழியில் போலீசார் வழி மறித்ததால் அங்கு செல்லாமல் வந்து விட்டோம். தற்போது நமது பாரம்பரிய விளையாட்டை காப்பதற்காக போராடிய நமது சகோதரர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் பலரும் மாணவர்கள். கைது நடவடிக்கையால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும். தமிழக மக்களின் உரிமைக்காக போராடும் இளைஞர்கள், மாணவர்களுக்கு தமிழக மக்கள் வேறுபாடு இல்லாமல் ஆதரவு அளிக்க வேண்டும்’ என்றார்.
பாரம்பரிய விளையாட்டுபோராட்டத்தில் கலந்து கொண்ட இளம்பெண் மலர்க்கொடி என்பவர் கூறும்போது, ‘ஜல்லிக்கட்டு நமது பாரம்பரிய விளையாட்டு. அதை தடை செய்ய பீட்டா யார்? எனது உணவு எது? எனது விளையாட்டு எது? என்று முடிவு செய்ய வேண்டியது நான். ஆனால் ஏதோ ஒரு அன்னிய நாட்டு நிறுவனம் எனது உணவை முடிவு செய்ய விடக்கூடாது. இது நமது தமிழ் இனத்துக்கு எதிரானவர்களுடனான போராட்டம். இதில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும்’ என்றார்.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்கும்வரை போராட்டம் நடைபெறும் என்று போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்தனர்.
வாட்ஸ்–அப் சமூக வலைதளம் மூலம் தகவல் கொடுத்து சில மணி நேரத்தில் 500–க்கும் மேற்பட்டவர்கள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தையொட்டி ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு சம்பத் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், ரவிக்குமார், முருகன், அருள், சரவணன், அமுதா, சப்–இன்ஸ்பெக்டர் ரேகா, தமிழரசு உள்பட போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.