வால்பாறை அருகே தனியார் தேயிலை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து


வால்பாறை அருகே தனியார் தேயிலை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 18 Jan 2017 3:00 AM IST (Updated: 18 Jan 2017 2:25 AM IST)
t-max-icont-min-icon

ரூ.1 கோடி மதிப்புள்ள தேயிலை தூள் நாசம்

வால்பாறை அருகே தனியார் தேயிலை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.1 கோடி மதிப்புள்ள தேயிலை தூள் நாசமானது.

தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து

கோவை மாவட்டம் வால்பாறை அருகே தனியார் எஸ்டேட் நிர்வாகத்திற்கு சொந்தமான கல்லார் எஸ்டேட் பகுதியில் டீத்தூள் தயாரிக்கும் தேயிலை தொழிற்சாலை உள்ளது. இந்த தேயிலை தொழிற்சாலையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு திடீரென்று தீ பிடித்துள்ளது. நள்ளிரவு நேரம் என்பதாலும் தொழிற்சாலைக்கு விடுமுறை விடப்பட்டு இருந்ததாலும் முதலில் தீ பிடித்தது யாருக்கும் தெரியவில்லை. பின்னர் தீ பிடித்து மளமளவென எரியத்தொடங்கி உள்ளது. அதன்பின்னர் தான் தேயிலை தொழிற்சாலை காவலாளிகளுக்கு தீப்பிடித்த விவரம் தெரிய வந்தது.

இது குறித்து காவலாளிகள் எஸ்டேட் அதிகாரிகளுக்கும், வால்பாறையில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் எஸ்டேட் நிர்வாகத்தினர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் 3 மாடி கொண்ட தேயிலை தொழிற்சாலை முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தொழிற்சாலைக்குள் இருந்த எந்திரங்கள், தகர மேற்கூரைகள், ஜன்னல், கதவுகளின் கண்ணாடிகள் அனைத்தும் வெடித்து சிதறின. தீ ஜூவாலையால் அந்த பகுதி முழுவதும் வெப்பமாக காணப்பட்டது. இதனால் அருகில் உள்ள குடியிருப்புகளில் வசித்த தொழிலாளர்கள் அங்கு ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ரூ.1 கோடி தேயிலை தூள் நாசம்

அதற்குள் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொழிலாளர்களும், தீயணைப்பு வீரர்களும் சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.நீண்ட நேரம் போராடியும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் தேயிலை தொழிற்சாலை முழுவதும் எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தேயிலைதூளும் நாசமானது. மேலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான தேயிலைதூள் தயாரிக்கும் நவீன எந்திரங்களும், தேயிலை தொழிற்சாலையில் பணிபுரிந்துவரும் தொழிலாளர்களின் கோப்புகள்,பல்வேறு உபகரணங்களும் எரிந்து சாம்பலானது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆங்கிலேயர் காலத்தில் வடிவமைத்து கட்டப்பட்ட இந்த தேயிலை தொழிற்சாலையில் ஓவ்வொரு நாளும் 3 ‘சிப்ட்‘ வேலை நடைபெறும். ஒரு ‘சிப்ட்‘டுக்கு குறைந்தது 110 தொழிலாளர்களும், 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் பணிபுரிவார்கள். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கிலோ தேயிலைதுள் தயாரிக்கப்பட்டு வந்தது.

உயிர் சேதம் தவிர்ப்பு

கடந்த 3 நாட்களாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொழிற்சாலைக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. தொழிலாளர்கள் யாரும் வேலைக்கு வரவில்லை. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து வால்பாறையில் உள்ள ஒரே ஒரு தீயணைப்பு வாகனம் மூலம் முழுமையாக தீயை அணைக்க முடியாது என்பதால் தாசில்தார் கோமதி கோவை, பொள்ளாச்சி பகுதியிலிருந்து கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். இருந்தாலும் அங்கிருந்து தீயணைப்பு நிலைய வாகனங்கள் வருவதற்குள் அதிகாலை 2.15 மணியிலிருந்து காலை 9.15 மணி வரை 7 மணிநேரம் போராடி எஸ்டேட் தொழிலாளர்களும், தீயணைப்பு வீரர்களும் தீயை அணைத்தனர். முதல் கட்ட விசாரணையில் தீ விபத்துக்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து முடீஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story