ஊட்டியில் பனிப்பொழிவால் கருகும் தேயிலை செடிகள்


ஊட்டியில் பனிப்பொழிவால் கருகும் தேயிலை செடிகள்
x
தினத்தந்தி 18 Jan 2017 4:00 AM IST (Updated: 18 Jan 2017 2:25 AM IST)
t-max-icont-min-icon

பச்சை தேயிலை மகசூல் இழப்பால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

பனிப்பொழிவு

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை மழை பெய்யும். டிசம்பர் மாதம் தொடங்கி ஜனவரி முதல் வாரம் வரை கடும் உறைபனிப்பொழிவு காணப்படும். கடந்த ஆண்டு 52 சதவீத அளவிற்கு மழை குறைவாக பெய்தது. மேலும் வழக்கத்திற்கு மாறாக நவம்பர் மாதம் இறுதியிலேயே உறைபனிப்பொழிவு காணப்பட்டது. அதன்பின்னர் புயல் காரணமாக மீண்டும் டிசம்பர் மாதத்தில் கடும் உறை பனிப்பொழிவு காணப்பட்டது.

இந்த மாத தொடக்கம் முதல் பல நாட்கள் குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருந்தது. அவலாஞ்சி, முக்குருத்தி உள்ளிட்ட இடங்களில் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டது.

தேயிலை செடிகள் கருகின

வழக்கமாக ஜனவரி 2-வது வாரம் முதல் உறைபனிப்பொழிவின் தாக்கம் குறைந்து விடும். ஆனால் இந்த ஆண்டு 2-வது வாரம் முடிந்த பின்னரும் உறைபனிப்பொழிவு காணப்படுகிறது. நேற்று அதிகபட்சமாக 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி இருந்தது. இந்த உறைபனிப்பொழிவு தொடர்ந்து நீடித்து வருவதால் தேயிலை செடிகள் கருகி வருகின்றன. ஏற்கனவே போதிய அளவு மழை பெய்யாததால் மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. இந்த நிலையில் உறைபனிப்பொழிவும் தொடர்வதால் தேயிலை செடிகள் வேகமாக கருகி வருகின்றன.

தேயிலை செடிகள் கருகுவதால் பச்சை தேயிலை மகசூல் வெகுவாக குறைந்து உள்ளது. 10 கிலோ பச்சை தேயிலை கிடைக்க கூடிய இடத்தில் தற்போது 4 கிலோ மட்டுமே மகசூல் கிடைக்கிறது. இதனால் தேயிலை தொழிலாளர்கள் வேலையிழப்பை சந்தித்து வருகின்றனர். மேலும் விவசாயிகளுக்கான வருமானமும் வெகுவாக குறைந்து உள்ளது.

நிவாரண உதவி வழங்க கோரிக்கை

இதுகுறித்து தேயிலை விவசாயிகள் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதிய அளவு பருவமழை பெய்யாததால் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. தற்போது பகல் நேரங்களில் சமவெளிபகுதிகளை போன்று வெயில் அடித்து வருகிறது. இரவு நேரங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்படுகிறது. பச்சை தேயிலை மகசூல் தற்போது குறைந்து வருவதால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளோம். மேலும் தேயிலை தோட்டங்களை பராமரிக்க முடியாத நிலையும் ஏற்பட்டு உள்ளது. இதனால் நாங்கள் கவலை அடைந்துள்ளோம்.

நீலகிரி மாவட்டத்தில் வறட்சியும், உறைபனிப்பொழிவும் தொடர்ந்து நீடித்தால் விவசாயிகளுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்படும். எனவே மத்திய, மாநில அரசுகள் எங்களுக்கு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Next Story