கோவை அருகே உதவி பேராசிரியை கொலை


கோவை அருகே உதவி பேராசிரியை கொலை
x
தினத்தந்தி 18 Jan 2017 3:30 AM IST (Updated: 18 Jan 2017 2:26 AM IST)
t-max-icont-min-icon

ரூ.30 லட்சம் வீட்டை அபகரிக்கவே உதவி பேராசிரியை லதாவின் கழுத்தை அறுத்து கொன்று உடலை எரித்ததாக கைதான அவருடைய தம்பி வாக்குமூலம் அளித்து உள்ளார்

கோவை

ரூ.30 லட்சம் வீட்டை அபகரிக்கவே உதவி பேராசிரியை லதாவின் கழுத்தை அறுத்து கொன்று உடலை எரித்ததாக கைதான அவருடைய தம்பி வாக்குமூலம் அளித்து உள்ளார்.

உதவி பேராசிரியை கொலை

கோவையை அடுத்த இருகூர் ஐ.ஓ.பி.காலனியை சேர்ந்தவர் சிவலிங்கம். இவருடைய மனைவி லதா (வயது 38). இவர் திருப்பூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியையாக வேலை பார்த்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக லதா, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டின் அருகே, ரூ.30 லட்சத்துக்கு புதிதாக வீடு வாங்கி குடியிருந்து வந்தார். அவரது குழந்தையை பெற்றோர் வீட்டில் விட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி லதா வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், மண்எண்ணெய் ஊற்றி உடல் எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள், கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

வாக்குமூலம்

இந்த நிலையில் லதாவின் செல்போனுக்கு வந்த அழைப்பு விவரங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டனர். இதற்காக லதாவின் வீட்டின் அருகே உள்ள செல்போன் டவரில் பதிவான அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது லதாவின் செல்போனுக்கு சம்பவம் நடந்த அன்று அதிகாலை 2.30 மணிக்கு வந்த செல்போன் அழைப்பின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த அழைப்பு எண்ணில் இருந்து, லதாவின் அண்ணன் மருமகன் சந்திரசேகரன் (வயது 25) என்பவர் பேசியது தெரியவந்தது.எனவே அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் லதாவின் தம்பி சதீஷ்குமார் (34) கூறியதன் பேரில், அவருக்கு உடந்தையாக சந்திரசேகரனும் சேர்ந்து லதாவை கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சந்திரசேகரன், சதீஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

கைதான சதீஷ்குமார் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

திருமணம் தடைபட்டது

கணவரை பிரிந்து வாழும் எனது அக்காள் லதா நடத்தை சரியில்லாமல் இருந்தார். இது பற்றி கேள்விப்பட்ட போது எனக்கு அவமானமாக இருந்தது. அவரது ஒழுங்கீனம் காரணமாக எனது திருமணம் தடைபட்டது. இதனால் அவர் மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. இது தவிர அவரது வீட்டில் ஏதாவது காணாமல் போனால் என்னைத்தான் திருடன் என்ற குற்றம் சாட்டுவார். இதுவும் எனக்கு அவர் மீது கோபத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அவர் இருகூர் பகுதியில் ரூ.30 லட்சத்துக்கு சொந்தமாக வீடு வாங்கி குடியேறினார். வீட்டை எனது தாய் பெயரில் வாங்கினார். ஆனால் அந்த வீட்டை எப்படியாவது எனது பெயருக்கு மாற்றி விட வேண்டும் என்ற ஆசை எனக்குள் எழுந்தது. இந்த நிலையில் அந்த வீட்டை அபகரிக்க, அக்காவை தீர்த்து கட்டுவதை தவிர வேறு வழியில்லை என்று எண்ணினேன்.

போலீசில் சிக்கினோம்

இது குறித்து எனது அண்ணன் மருமகன் சந்திரசேகரனை தொடர்பு கொண்டு கூறினேன். இந்த கொலை செய்வதற்கு பணம் தருவதாகவும் கூறினேன். அதற்கு அவரும் ஒப்புக்கொண்டார். இதன்படி, சம்பவத்தன்று நாங்கள் இருவரும் லதாவின் வீட்டுக்கு சென்று சென்று அவரின் கழுத்தை கத்தியால் அறுத்து துடிதுடிக்க கொலை செய்தோம். பின்னர் அவர் அணிந்திருந்த 7 பவுன் நகையை கழற்றி விட்டு, அவரது உடலை மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்தோம்.

நகை பறிக்கும் முயற்சியில் லதா கொலை செய்யப்பட்டதாக போலீசாரை நம்பவைக்க, அவரது கழுத்தில் இருந்து பறித்த நகையை அருகில் உள்ள சாக்கடையில் வீசினோம். காதில் இருந்த கம்மல்களை மட்டும் கழற்ற வில்லை. அதற்குள் அவசரப்பட்டு உடலில் தீ வைத்து விட்டதால், அதனை விட்டுவிட்டோம். இப்போது போலீசில் சிக்கிக்கொண்டோம்.

இவ்வாறு அவர்கூறினார்.

சொத்துக்காக அக்காவையே தம்பியும், அண்ணன் மருமகனும் கொன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story