ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் தை அமாவாசை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் தை அமாவாசை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஏரல்,
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் தை அமாவாசை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தை அமாவாசை திருவிழாதூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலும் ஒன்றாகும். கோவிலில் ஆண்டுதோறும் ஆடி, தை மாதங்களில் அமாவாசை திருவிழா 12 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். விழா நாட்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் தங்கியிருந்து, ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்வார்கள்.
கொடியேற்றம்இந்த ஆண்டு தை அமாவாசை திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 6.15 மணியளவில் கோவில் வெள்ளி கொடிமரத்தில், கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் கொடியேற்றினார். தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மதியம் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
சிவப்பு சாத்துதல்விழா நாட்களில் தினமும் காலை, இரவில் சுவாமி பல்வேறு அலங்காரங்களில் சப்பரத்தில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். விழாவின் சிகர நிகழ்ச்சியான தை அமாவாசை திருவிழா 10–ம் திருநாளான வருகிற 27–ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அன்று மதியம் 1 மணிக்கு சாமி உருகுபலகை தரிசனம், அபிஷேகம், மாலை 4 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலக் காட்சி, இரவு 10 மணிக்கு கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம் நடக்கிறது.
வெள்ளை சாத்துதல்11–ம் திருநாளான 28–ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு வெள்ளைசாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம், மாலையில் ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தலில் தாகசாந்தி, இரவு 10.30 மணிக்கு சாமி மூலஸ்தானம் சேரும் ஆனந்த காட்சி நடக்கிறது.
விழாவின் நிறைவு நாளான 29–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையில் தாமிரபரணி ஆற்றில் நீராடல், மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவில் ஆலிலை சயனம், மங்கள தரிசனம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் செய்து உள்ளார்.