போடியில், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் கொட்டி மாணவர்கள் போராட்டம்
போடியில், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் கொட்டி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
போடி,
போடியில், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் கொட்டி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
2–வது நாளாக போராட்டம்தேனி மாவட்டம் போடியில், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் நேற்று முன்தினம் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 2–வது நாளான நேற்று போடி ஏல விவசாயிகள் சங்க கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு கல்லூரியின் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 300–க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் போடி நகரில் உள்ள பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கல்லூரி மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்திலும் கலந்துகொண்டனர். பின்னர் போடி பாரத ஸ்டேட் வங்கி முன்பு இருந்து கல்லூரி மாணவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முக்கிய வீதிகளில் பேரணியாக சென்றனர். அப்போது சிலர் தங்களுடன் காளைகளையும் அழைத்துச்சென்றனர். கூட்டத்தினரை பார்த்ததும் காளைகள் மிரண்டன. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவற்றை அப்புறப்படுத்தினர்.
குளிர்பானங்களை கொட்டினர்இதற்கிடையே பேரணி திருவள்ளுவர் சிலை திடல் அருகே வந்து நிறைவடைந்தது. பின்னர் அங்கும் கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும், ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரியும் கோஷங்கள் எழுப்பிய கல்லூரி மாணவர்கள் வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் கொட்டி போராட்டம் நடத்தினர்.
போடி அரசு பொறியியல் கல்லூரி மாணவர்களும் கல்லூரி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் போராட்டத்தையொட்டி போடி பகுதி முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கூடலூர்இதே போல் கூடலூர் பகுதியிலும் ஜல்லிக்கட்டு நடத்த சிறப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள், பொதுமக்கள் ஊர்வலம் நடத்தினர். விவசாயிகள்நல சங்க மாநில துணை செயலாளர் செங்குட்டுவன் தலைமையில் கூடலூர் பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு இருந்து ஊர்வலம் தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று புதிய பஸ் நிலையத்தை அடைந்த ஊர்வலத்தில் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஊர்வலத்தின் போது சிலர் ரேக்ளா பந்தயத்தில் பயன்படுத்தப்படும் காளைகளையும் அழைத்து வந்தனர். பின்னர் பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டமும் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு, பீட்டா அமைப்பை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது அந்த வழியாக ஒரு லாரி வந்தது. அதில் கேரளாவுக்கு இறைச்சிக்காக மாடுகள் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரியை போராட்டக்காரர்கள் மறித்து திருப்பி அனுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கம்பம்கம்பம் தலைமை தபால் நிலையம் முன்பு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த உள்ளதாக கல்லூரி மாணவர்கள் சிலர் முகநூல், வாட்ஸ்–அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் அழைப்பு விடுத்தனர். அதன்படி நேற்று மாலை 6 மணி முதல் தலைமை தபால் நிலையம் முன்பு கம்பத்தில் இருந்து வெளியூர்களில் உள்ள கல்லூரிகளுக்கு சென்று படிக்கும் ஏராளமான மாணவர்கள் திரண்டனர். பின்னர் தபால் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடக்கத்தில் குறைந்த அளவு மாணவர்களே போராட்டம் நடத்தினர். நேரம் செல்லச்செல்ல 300–க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இவர்களுக்கு ஆதரவாக அப்பகுதி பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் வரை எங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றனர். கல்லூரி மாணவர்களின் போராட்டம் காரணமாக கம்பம் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனால் அங்கு பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பழனிசெட்டிபட்டியிலும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம் நடந்தது.
உத்தமபாளையம்உத்தமபாளையம் அருகே உள்ள பண்ணைப்புரத்தில் நேற்று 100–க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொதுமக்கள் திரண்டனர். பின்னர் அங்குள்ள கடைவீதி பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகளை கொண்டு வந்து ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
ராயப்பன்பட்டி பஸ் நிறுத்தம் அருகிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அப்பகுதியில் உள்ள மாநில நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மறியலை கைவிடும்படி போராட்டக்காரர்களிடம் கூறினர். ஆனால் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என கூறி இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.