கல்லூரி மாணவ-மாணவிகள் 2-வது நாளாக போராட்டம்


கல்லூரி மாணவ-மாணவிகள் 2-வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 19 Jan 2017 4:45 AM IST (Updated: 19 Jan 2017 3:45 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில், ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு

திண்டுக்கல்,

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி கல்லூரி மாணவ- மாணவிகள் 2-வது நாளாக போராட்டம் நடத்தினர். ஆயிரக்கணக் கானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விடிய, விடிய போராட்டம்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவர்கள்- இளைஞர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் திண்டுக்கல் கல்லறை தோட்டம் அருகே ஏராளமான மாணவர்கள் திரண்டனர். சில மாணவிகள் மற்றும் சிறுமிகளும் வந்திருந்தனர். அவர்கள் விடிய, விடிய அங்கேயே அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

மேலும் இதுகுறித்து ‘வாட்ஸ்- அப்’, முகநூலில் தங்களது நண்பர்களிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து 2-வது நாளான நேற்று, காலை முதலே மாணவ- மாணவிகள் திண்டுக்கல் கல்லறை தோட்டம் நோக்கி வரத்தொடங்கினர். மாவட்டம் முழுவதும் கல்லூரியை புறக்கணித்துவிட்டு மாணவ- மாணவிகள் திண்டுக்கல் நோக்கி ஊர்வலமாக வந்தனர். அவர்களை ஆங்காங்கே போலீசார் நிறுத்தி கொஞ்சம், கொஞ்சமாக அனுப்பி வைத்தனர்.

மோட்டார் சைக்கிளில் ஊர்வலம்

கல்லூரி மாணவர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்று ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும், பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்று கோஷங் களை எழுப்பினர். மேள, தாளங்கள் முழங்க சிலர் ஆடிப்பாடி கல்லறை தோட்டத்திற்கு வந்தனர். அப்போது மாணவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தபடியே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

கல்லறை தோட்டம் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அவர்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பியபடியே இருந்தனர்.

பேராசிரியர்கள் பங்கேற்பு

அப்போது, ஜல்லிக்கட்டு தமிழர்களின் உரிமை. அதனை இந்த மாதமே நடத்த வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும். மேலும் பீட்டா அமைப்பை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்றனர்.

போராட்டத்திற்கு வந்தவர்களுக்கு வரும் வழிநெடுகிலும் மாணவர்கள் சார்பில் தண்ணீர் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. நேற்று மாலை கல்லூரி முடிந்து சில தனியார் கல்லூரி பேராசிரியர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த போராட்டம் நேற்று இரவு வரை தொடர்ந்து நடந்தது.

கொடைக்கானல், சத்திரப்பட்டி

இதேபோல சத்திரப்பட்டி பஸ்நிறுத்தம் அருகே, அந்த பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள்- இளைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும். அழிந்து வரும் பர்கூர், காங்கேயம் காளை இனங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி, வேடசந்தூர் அரசு கல்லூரி முன்பு மாணவ- மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நத்தம் பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், நாம் தமிழர் கட்சியினர், அஜித், விஜய் ரசிகர் மன்றத்தினர், ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகிகள், காளை வளர்ப்போர் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், நாம் தமிழர் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, சிறு வியாபாரிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், எஸ்.டி.பி.ஐ., இந்திய தேசிய லீக் கட்சி உள்பட அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டனர். முன்னதாக மெயின் ரோடு, பஸ்நிலையம், கடைவீதி, சந்தை வழியாக ஊர்வலமாக சென்றனர்.

ஜல்லிக்கட்டு காளைகளுடன்....

பழனியில், பழனியாண்டவர் கலை பண்பாட்டுக்கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாசலில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோல பழனி-உடுமலை ரோட்டில் சுக்கமநாயக்கன்பட்டியில் உள்ள ஸ்ரீ சுப்ரமண்யா பொறியியல் தொழிநுட்பக்கல்லூரி மாணவ, மாணவியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து பழனிக்கு சுமார் 8 கிலோமீட்டர் தூரம் பேரணியாக சென்று அவர்கள் பழனி பஸ்நிலையம் ரவுண்டானாவுக்கு வந்தனர்.

இதுமட்டுமின்றி பல்வேறு கிராமங்களில் இருந்து முகநூல் நண்பர்கள், சமூக ஆர்வலர்கள் காளை மாடுகளுடனும், மாட்டு வண்டிகளுடனும், 50-க்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களிலும் பழனி நோக்கி வந்து பஸ்நிலையம் ரவுண்டானவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களுடன் இணைந்தனர். இதனால் பழனி பஸ்நிலையம் பகுதியில் போக்குவரத்து பாதித்தது.

இதைத்தொடர்ந்து மாற்று வழியில் பஸ்கள் திருப்பி விடப்பட்டன. ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் மாட்டுவண்டி மற்றும் காளைகளுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டம் நடக்கிற இடத்துக்கு வந்து ஆதரவு தெரிவித்தார். தி.மு.க. மாணவர் அணியினரோடு இணைந்து அவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

குஜிலியம்பாறையில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் பஸ்நிலையம் முன்பு போராட்டம் நடந்தது. ஈடுபட்டனர். மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியவர் களை கைது செய்ததை கண்டித்தும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அய்யம்பாளையத்தில் உள்ள பெரியமுத்தாலம்மன் கோவில் மைதானத்தில் ஜல்லிக்கட்டு பேரவை, மாடு வளர்ப்போர், மாடு பிடி வீரர்கள், மாணவர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதே போல் கே.சிங்காரக்கோட்டை பி.வி.பி கல்லுாரி மாணவர்கள் கல்லுாரி நுழைவு வாயில் எதிரில் நின்று கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராம பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து, திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பு உட்கார்ந்து மறியல் செய்தனர். இதேபோல் சின்னாளப்பட்டி பேரூராட்சி அலுவலகம் அருகே காந்தியார் திடலில் பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடந்தது.

இதேபோல் ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் அருகே தனியார் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். 

Next Story