சத்திரப்பட்டி அருகே தனியார் துணிக்கடை ஊழியர்களை சிறைபிடித்த பெண்கள்
சத்திரப்பட்டி அருகே தனியார் துணிக்கடை ஊழியர்களை பெண்கள் சிறைபிடித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே விருப்பாட்சி உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 1,000–க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நேற்று முன்தினம் திண்டுக்கல்லில் செயல்படுகிற ஒரு தனியார் துணிக்கடை ஊழியர்கள் அங்கு சென்றனர். வீடு, வீடாக சென்ற அவர்கள் பொங்கல் பண்டிகையையொட்டி கோலப்போட்டி வைத்திருப்பதாக கூறினர்.
மேலும் கோலப்போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு நிச்சய பரிசாக ரூ.100 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும் என்றும், சிறந்த கோலங்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர். இதன் எதிரொலியாக அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஆர்வமுடன் கோலம் போட்டனர். சுமார் 600–க்கும் மேற்பட்ட வீடுகளில் கோலம் போட்டதாக தெரிகிறது.
சிறைபிடித்த பெண்கள்இந்தநிலையில் நேற்று காலை 9 மணி அளவில், சிறந்த கோலங்களை தேர்வு செய்து புகைப்படம் எடுப்பதற்காக தனியார் துணிக்கடை ஊழியர்கள் விருப்பாட்சிக்கு வந்தனர். அவர்களை, அப்பகுதி பெண்கள் சிறைபிடித்தனர். மேலும் தங்களுக்கு உடனடியாக பரிசு பொருட்கள் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சத்திரப்பட்டி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி துணிக்கடை ஊழியர்களை விடுவித்தனர். மேலும் இது தொடர்பாக சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தினால் சத்திரப்பட்டி பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.