இளைஞர்கள், எங்கள் மீது தொடுக்கும் விமர்சனங்களை ஏற்கிறோம் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


இளைஞர்கள், எங்கள் மீது தொடுக்கும் விமர்சனங்களை ஏற்கிறோம் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 19 Jan 2017 4:05 AM IST (Updated: 19 Jan 2017 4:05 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு நடத்த முடியாத கோபத்தில் இளைஞர்கள், எங்கள் மீது தொடுக்கும் விமர்சனங்களை ஏற்கிறோம் என்று பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

திருச்சி,

பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திருச்சியில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய மந்திரியிடம் வலியுறுத்துவோம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைய தலைமுறையினர் களம் இறங்கி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் வரை பா.ஜ.க. ஓயாது. அதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். இளைஞர்கள்- மாணவர்கள் தங்களை வருத்தி கொள்வது வேதனையாக இருக்கிறது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஜல்லிக்கட்டை மீட்டெடுப்போம் என்று பேசி இருக்கிறார். அப்படியானால் ஜல்லிக்கட்டு போட்டியை தொலைத்ததற்கு யார் காரணம்?. காங்கிரஸ் ஆட்சியின் போது முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளையை சேர்த்தபோது அவர்களுடன் ஆட்சியில் இருந்த தி.மு.க. என்ன செய்து கொண்டு இருந்தது?.

நாங்கள் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் போராடி வருகிறோம். உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் போது அவசர சட்டம் பிறப்பிக்க முடியாது. ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாகவும், தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்களின் போராட்டம் குறித்தும் நாளை(வெள்ளிக்கிழமை) பா.ஜனதா தமிழக தலைவர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் இணைந்து டெல்லி சென்று மத்திய சுற்றுச்சூழல்துறை மந்திரியை சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்த உள்ளோம்.

பீட்டா அமைப்பை தடை...

ஜல்லிக்கட்டு நடத்த முடியாத கோபத்தில் இளைஞர்கள் எங்கள் மீது சமூக வலைதளங்களில் மோசமான விமர்சனங்களை பதிவு செய்கிறார்கள். இந்த விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறோம். இந்த விமர்சனங்களை தொடுப்பவர்களுக்கு உள்ள அதே மனநிலையில் தான் நாங்களும் இருக்கிறோம். ஜல்லிக்கட்டை நடத்துவதில் பா.ஜ.க.வினருக்கு அக்கறை இல்லை என வைக்கும் விமர்சனத்தை புறந்தள்ளுகிறோம். தமிழகத்தில் ஜல்லிக்கட்டை வைத்து மற்ற கட்சிகள் அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பா.ஜனதா உண்மையாக போராடி வருகிறது. மேலும், தமிழக அரசிடம் நாங்கள் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது அடக்குமுறைகளை கையாளக்கூடாது. அவர்கள் மீது வழக்கு போடுவதை தவிர்த்து, கைது செய்யப்பட்ட அனைத்து மாணவர்களையும் விடுவிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு குறித்து சுப்பிரமணியசாமி கூறும் கருத்தை பா.ஜ.க.வின் கருத்தாக பார்க்கக்கூடாது. ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழக அரசை கவிழ்க்க வேண்டும் என்று பீட்டா அமைப்பு வலியுறுத்தி இருக்கிறதென்றால் அந்த அமைப்பின் செயல்பாட்டின் உள்நோக்கம் என்ன என்பது தெரியவில்லை. பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

இதனை தொடர்ந்து பா.ஜனதா கட்சி சார்பில் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் ஜல்லிக்கட்டு குறித்த சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில பொதுச்செயலாளர்கள் நரேந்திரன், கருப்புமுருகானந்தம், மாநில துணைத்தலைவர் வானதிசீனிவாசன், கோட்ட பொறுப்பாளர் சிவசுப்பிரமணியன், கோட்ட இணை பொறுப்பாளர் இல.கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story