ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி திருப்பூர் மாவட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம்


ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி திருப்பூர் மாவட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 19 Jan 2017 4:45 AM IST (Updated: 19 Jan 2017 4:05 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டுக்கு விதிக் கப்பட்ட தடையை நீக்கக்கோரி திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டு போராட்டங்களை நடத்தினர்.

ஜல்லிக்கட்டு போட்டி

சுப்ரீம் கோர்ட்டு தடையை மீறி மதுரை அலங்காநல்லூர் உள்பட பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அப்போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அத்துடன் காளை மாடுகளை பறிமுதல் செய்து, ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரியும், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தடியடி நடத்திய போலீசார் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி சமூக வலைத்தளம் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி, திருப்பூரை சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவ-மாணவிகள் சுமார் 4,500 பேர் நேற்று வகுப்புகளை புறக்கணித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பும், திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரேயும் காலை 8 மணியளவில் ஒன்று திரண்டனர்.

அங்கு அவர்கள் தரையில் அமர்ந்து தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திருநங்கைகளும், ஏராளமான இளைஞர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். காலையில் தொடங்கிய போராட்டம் மாலை வரை நீடித்தது. மாணவர்களுக்கு பல்வேறு தன்னார்வ அமைப்பை சேர்ந்தவர்கள் குடிநீர், பிஸ்கெட் பாக்கெட்கள், உணவு பொட்டலங்களை ஏற்பாடு செய்து கொடுத்தனர். இந்த போராட்டத்தையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.அத்துடன் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட நடமாடும் கண்காணிப்பு வாகனம்மூலம் போராட்டக்காரர்களை போலீசார் கண்காணித்தனர்.

காளைகள் வளர்ப்போர்

இதுபோல் பொங்கலூர் அருகே அவினாசிபாளையத்தில் உள்ள ஏ.ஜி. கலை அறிவியல் கல்லூரி முன்பு அந்த கல்லூரி மாணவர்கள் 1,500 பேர் வகுப்புகளுக்கு செல்லாமல் புறக்கணிப்பு செய்தனர். இதில் 500 மாணவர்கள் கல்லூரி முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முத்தூர் அருகே நத்தக்காடையூர் கடைவீதியில் கல்லூரி மாணவர்கள், காளைகள் வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் 2 ஆயிரம் பேரும் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலையில் அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி நுழைவு வாயில் பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதம்

இதுபோல் தாராபுரம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சுமார் 500 பேர் தாராபுரம் பஸ்நிலையம் முன்பு நேற்று காலை முதல் உண்ணாவிரதம் இருந்தனர். காங்கேயத்தில் போலீஸ் நிலையம் அருகிலும், அவினாசியில் புதிய பஸ்நிலையம் முன்பும் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என்று 500-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர்.

பொங்கலூர் அருகே உள்ள வாவிபாளையத்தில் வர்த்தகர்கள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினார்கள். மேலும் அங்கு பொதுமக்கள் சுமார் 120 பேர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். இதில் 10 பேர் இன்றும்(வியாழக்கிழமை) தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபடுகிறார்கள்.

ஆர்ப்பாட்டம்

இதுபோல், திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் 1,500 மாணவிகள் நேற்றுகாலை கல்லூரி வளாகத்திற்குள் ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து, ஊர்வலம் சென்றனர். போலீசார் அவர்களை தடுத்தனர். பின்னர், தொழிற்பயிற்சி நிலையம் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் உடுமலை மத்திய பஸ் நிலைய முன்பு இளைஞர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் பாண்டியன் நகரில் பொதுமக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் அமைப்பு சார்பில் ஊர்வலம் நடந்தது. வெள்ளகோவிலில் காளைகளுடன் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இந்த போராட்டங்களின் போது ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான ‘பீட்டா’ அமைப்பை தடை செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தடியடி நடத்திய போலீசார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

போலீசார் பேச்சுவார்த்தை

மேலும் திருப்பூரில் நடந்த போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள் ‘பீட்டா அமைப்பே நாட்டைவிட்டு வெளியேறு’, ‘மாடுகள் எங்களது குழந்தைகள்’, ‘பீட்டா அமைப்பை தடைசெய்’ என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பாதகைகளை வைத்திருந்தனர். அத்துடன் பீட்டா அமைப்புக்கு ஆதரவு தெரிவித்த நடிகை திரிஷாவின் புகைப்படத்தை குப்பை தொட்டியில் ஒட்டியும், அட்டை பெட்டியில் பீட்டா ஒரு குப்பை தொட்டி என்று எழுதியும், அதில் குப்பைகளை சேகரித்தனர்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பும், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் எதிரேயும் நேற்றுகாலை தொடங்கிய மாணவர்கள் போராட்டம் மாலையிலும் நீடித்தது. அவர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு போலீஸ் துணை கமிஷனர் திஷா மிட்டல், உதவி கமிஷனர் மணி உள்பட போலீஸ் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் மாணவர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story