தடையை மீறி 3 இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டு


தடையை மீறி 3 இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டு
x
தினத்தந்தி 19 Jan 2017 4:09 AM IST (Updated: 19 Jan 2017 4:08 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை அருகே தடையை மீறி 3 இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞர்கள் போட்டி போட்டு அடக்கினர்.

மணப்பாறை,

ஜல்லிக்கட்டு போட்டி

ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதி மன்றம் தடை விதித்து உள்ள நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தியே தீர வேண்டும் என்று தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர். இதற்கிடையில் தடையை மீறி பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஆவாரம்பட்டியில் உள்ள புனித இன்னாசியார் ஆலயம் அருகே நேற்று காலை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஊர் வழக்கப்படி தாரை தப்பட்டையுடன் காளைகள் அழைத்து வரப்பட்டன. பின்னர் கோவில் அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த வாடி வாசலுக்கு காளைகள் அழைத்துச் செல்லப்பட்டன.

அதைத் தொடர்ந்து காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சில காளைகள் கயிற்றுடனும் விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு போட்டி போட்டுக்கொண்டு அடக்கினர். ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர். இந்த ஜல்லிக்கட்டில் சுமார் 50-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

மேலும் 2 இடங்களில்...

இதே போல் என்.பூலாம்பட்டி அருகே உள்ள பெரியகுளத்துப்பட்டியில் ஊரின் கடைசிப்பகுதியில் தற்காலிக வாடி வாசல் அமைத்து ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட 10-க்கும் மேற்பட்ட காளைகளை இளைஞர்கள் பலரும் போட்டி போட்டுக் கொண்டு அடக்கினர். இந்த ஜல்லிக்கட்டை காண 500-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

இதே போல் மணப்பாறை அருகே வடுகபட்டியில் தடையை மீறி நடந்த ஜல்லிக்கட்டில் 10-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இது பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தடையை மீறி நடைபெற்ற ஜல்லிக்கட்டை தடுத்து நிறுத்தினர்.

Next Story