ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம்


ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 19 Jan 2017 4:24 AM IST (Updated: 19 Jan 2017 4:24 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி லால்குடி, தொட்டியம், துவரங்குறிச்சியில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

லால்குடி, -

லால்குடி

தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் லால்குடியில் கூட்டுறவு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சுமார் 200 பேர் ஆங்கரை பகுதியில் இருந்து ஊர்வலமாக லால்குடி நோக்கி வந்தனர். வழிநெடுக கையில் கருப்பு கொடி ஏந்தியபடி மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், பீட்டா அமைப்பை தடைசெய்ய வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பியபடி 2 கிலோ மீட்டர் தூரம் ஊர்்வலமாக வந்து லால்குடியை வந்தடைந்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் நான்குரோடு பகுதியில் லால்குடி அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் வெளியே காலியான இடத்தில் தரையில் அமர்ந்து தொடர்ந்து கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர்.

அமைப்பினர் நேரில் வாழ்த்து

தகவல் அறிந்த வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு பேரவை மாவட்ட செயலாளர் காத்தான், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை பாராட்டி குடிதண்ணீர், மற்றும் மதிய உணவுக்கான ஏற்பாடுகளை செய்தார். இதைத்தொடர்ந்து லால்குடி எம்.எல்.ஏ. சவுந்தரபாண்டியன், வக்கீல்கள் சங்கம், வணிகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர். இதை தொடர்ந்து பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த 50 மாணவிகள் உட்பட 100 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர். மேலும் மணக்கால் பகுதியில் உள்ள ஐ.டி.ஐ. மாணவர்கள், மற்றும் லால்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் என ஏராளமானோர் திரண்டு பீட்டா அமைப்பை தடைசெய்ய வலியுறுத்தியும், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரியும், அலங்காநல்லூரில் போராடிய மாணவர்களை கைது செய்ததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

லால்குடியின் முக்கிய பகுதியில் சுமார் 500 மாணவ, மாணவிகள் கூடி தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை காப்பாற்ற போராடி வருவது அப்பகுதி பொதுமக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இப்போராட்டம் குறித்து மாணவர்கள் கூறுகையில் இப்போராட்டம் இன்றுடன் நின்று விடாது. உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால் மேலும் மாணவர்களை திரட்டி பல்வேறு வகையான தொடர் போராட்டங்களை நடத்துவோம் என்று தெரிவித்தனர். இந்த நிலையில் மாலை 6 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.

தொட்டியம்

தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும், அவசர சட்டம் பிறப்பித்து ஜல்லிக்கட்டு நடக்க உத்தரவிடவேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வம் தலைமையில் தொட்டியம் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

துவரங்குறிச்சி

துவரங்குறிச்சி பஸ் நிலையம் முன்பு பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டு ஜல்லிக்கட்டை நடத்திட வேண்டும் என்று கூறி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பீட்டாவிற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும், வெளிநாட்டு குளிர்பானங்கள் வேண்டாம், ஜல்லிக்கட்டே போதும் என்று கூறி கண்டன கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ஜல்லிக்கட்டை நடத்திட மத்திய அரசு உடனடியாக அவசர சட்டம் இயற்றிட வேண்டும் உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய விளம்பர அட்டைகளை கையில் வைத்திருந்தனர். இதுமட்டுமின்றி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் சிலர் வெளிநாட்டு குளிர்பானங்களை சாலையில் கொட்டி குளிர்பானம் வேண்டாம், ஜல்லிக்கட்டே போதும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். குறைந்த அளவு மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் தொடங்கிய போராட்டத்திற்கு சுற்றுவட்டாரத்தில் இருந்து வந்த கிராம மக்களும் ஆதரவு தெரிவித்து அவர்களுடன் அமர்ந்து கொண்டனர். இதனால் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Next Story