சட்ட விரோத தொழில்களுக்கு தடையாக இருப்பதால் அரசியல்வாதிகள் தான் கவர்னர் மீது குற்றம் சாட்டுகிறார்கள்


சட்ட விரோத தொழில்களுக்கு தடையாக இருப்பதால் அரசியல்வாதிகள் தான் கவர்னர் மீது குற்றம் சாட்டுகிறார்கள்
x
தினத்தந்தி 19 Jan 2017 4:30 AM IST (Updated: 19 Jan 2017 4:28 AM IST)
t-max-icont-min-icon

சட்ட விரோத தொழில்களுக்கு தடையாக இருப்பதால் கவர்னர் மீது அரசியல்வாதிகள்தான் குற்றம்சாட்டுகிறார்கள் என்று புதுவை மாநில பா.ஜனதா தலைவர் தெரிவித்தார்.

செயற்குழு கூட்டம்

காரைக்காலில் பா.ஜனதா கட்சியின் புதுச்சேரி மாநில அளவிலான செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சாமி நாதன் தலைமை தாங்கினார். மாநில பொறுப்பாளர் மகேஷ்கிரி எம்.பி. கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தின்போது பணமற்ற பரிவர்த்தனை குறித்தும், பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா நூற்றாண்டு விழா குறித்தும் விவாதம் நடத்தப்பட்டது. தொடர்ந்து கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தினை தொடர்ந்து மாநில தலைவர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரியில் ஆளும் நாராயணசாமி அரசு இதுவரை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இந்த அரசு ஏழை - எளிய மக்களை முன்னேற்றுவதற்காக பிரதமரால் கொண்டுவரப்பட்ட திட்டங்களை பல்வேறு வகைகளிலும் முடக்குகின்ற அரசாக இருந்து வருகிறது. வருகிற பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய அரசின் பட்ஜெட் ஏழை மக்களின் முன்னேற்றத்திற்கான பட்ஜெட்டாக அமையும்.

தி.மு.க., காங்கிரஸ் செய்த தவறு

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பா.ஜனதா கட்சிக்கு எதிரான கருத்துகள் பரப்பப்படுகின்றன. ஜல்லிக்கட்டு நடைபெற கடந்த ஆண்டு பிரதமர் அவசர சட்டத்தை பிறப்பித்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். எனவே சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் ஒரு அவசர சட்டத்தை கொண்டு வர முடியாத நிலை தற்போது உள்ளது.

புதுவை, தமிழகம் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறோம். ஜல்லிக்கட்டுக்கு தடை என்பது காங்கிரஸ் - தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட மாபெரும் தவறாகும். அந்த தடையை நீக்கி மீண்டும் ஜல்லிக்கட்டை நடத்த பா.ஜனதா கட்சி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரியில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கான அனைத்து போராட்டங்களுக்கும் பா.ஜனதா கட்சி தனது முழு ஆதரவையும் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-

கட்சிக்கு அப்பாற்பட்டவர்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கவர்னருக்கு என்று சில அதிகாரங்கள் உள்ளன. அதிகாரத்தை மீறி அவர் செயல்படவில்லை. கடந்த காலங்களில் கவர்னர் மாளிகை என்பது வெறும் காட்சிப் பொருளாகத்தான் இருந்தது. தற்போது அந்த மாளிகைக்கும், பொதுமக்களுக்கும் இருந்த இடைவெளி குறைந்துள்ளது.

கட்சிக்கு அப்பாற்பட்டு புதுச்சேரி மாநிலம் ஒரு முன்மாதிரி மாநிலமாக வரவேண்டும் என்பதற்காக கவர்னர் கிரண்பெடி பாடுபடுகிறார். எனவே அவர் மீது அரசியல் சாயம் பூசவேண்டியதில்லை. இங்குள்ள பல எம்.எல்.ஏ.க் கள், அரசியல்வாதிகள் தங்களது தொழில், சட்ட விரோதமான மதுக்கடைகள், சீட்டு, கேபிள் டி.வி., கள்ள லாட்டரி, ரியல் எஸ்டேட் போன்றவற்றுக்கு கவர்னர் தடையாக இருக்கிறார் என்பதால் அவர் மீது மறைமுகமாக குற்றம் சாட்டுகிறார்களே தவிர, 90 சதவீத பொதுமக்கள் கவர்னருக்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பங்கேற்றவர்கள்

கூட்டத்தில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர்கள் ரவிச்சந்திரன், தங்க.விக்கிரமன், மாநில செயலாளர் அருள்முருகன், மாவட்ட தலைவர் மீனாட்சிசுந்தரம், மாநில ஓ.பி.சி. அணி தலைவர் துரை.சேனாதிபதி, விவசாய அணி பொதுச்செயலாளர் ராஜவேலு, மகளிர் அணி பொதுச்செயலாளர் நளினி கணேஷ், மாவட்ட பொதுச்செயலாளர் சித்திரைச்செல்வன், மாவட்ட செயலாளர் முருகதாஸ் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story