சர்வதேச நிறுவனங்கள் செயல்படுவதற்கான அனைத்து வசதிகளும் புதுவையில் செய்து தரப்படும் நாராயணசாமி உறுதி
சர்வதேச நிறுவனங்கள் செயல்படுவதற்கான அனைத்து வசதிகளும் புதுவையில் செய்து தரப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கையை வரைவு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் அக்கார்டு ஓட்டலில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் ஷாஜகான் தலைமை தாங்கினார். பிப்டிக் தலைவர் சிவா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியை தொடங்கிவைத்து முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் புதிய தொழிற்கொள்கையை கொண்டுவந்தோம். அதில் பல்வேறு சலுகைகளையும் அறிவித்தோம். இதைத்தொடர்ந்து பல்வேறு தொழிலதிபர்கள் தொழில் தொடங்க விண்ணப்பித்துள்ளனர். சமீபத்தில் பெங்களூருவில் நடந்த வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டேன். அவர்களிடம் புதுவையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை தொடங்க கேட்டுக்கொண்டேன்.
கட்டமைப்புதகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை கொண்டு வருவதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலைகிடைக்கும். அதற்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகள் நம்மிடம் உள்ளன.
விரைவிலேயே விமான போக்குவரத்து சேவையையும் தொடங்க உள்ளோம். எனவே சர்வதேச நிறுவனங்கள் செயல்படுவதற்கான அனைத்து வசதிகளும் புதுவையில் செய்து தரப்படும். தொழில் முதலீட்டாளர்கள் வழங்கும் ஆலோசனைகள் தகவல் தொழில்நுட்ப கொள்கையை உருவாக்க வசதியாக இருக்கும்.
இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார்.
டிஜிட்டல் நகரம்நிகழ்ச்சியில் அமைச்சர் ஷாஜகான் பேசும்போது, ‘புதுவையில் என்ஜினீயரிங் படித்த மாணவர்கள் தற்போது வேலைதேடி வெளிமாநிலங்களுக்கு செல்கின்றனர். அவர்களுக்கு புதுச்சேரியிலேயே வேலை கிடைக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை தொடங்க தேவையான வசதிகளை செய்து கொடுப்போம். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு 30 சதவீதம் மானியமும் தர உள்ளோம். புதுச்சேரியை டிஜிட்டல் நகரமாக மாற்ற உள்ளோம். நகரம் முழுவதும் இலவச வை–பை வசதி கொண்டுவர உள்ளோம்’ என்று குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி, தொழில்நுட்பத்துறை செயலாளர் மணிகண்டன், இயக்குனர் சிவக்குமார், தொழில்துறை செயலாளர் அருண்தேசாய், இயக்குனர் மலர்க்கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.