ஜல்லிக்கட்டு போராட்டம் அரசு கலைக்கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை


ஜல்லிக்கட்டு போராட்டம்  அரசு கலைக்கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை
x
தினத்தந்தி 19 Jan 2017 4:55 AM IST (Updated: 19 Jan 2017 4:55 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்டத்தில் இறங்கி உள்ளதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் இன்று முதல் காலவரையற்ற விடுமுறை.

சென்னை,

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்டத்தில் இறங்கி உள்ளதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளுக் கும் இன்று (வியாழக்கிழமை) முதல் காலவரையற்ற விடுமுறை விடப்படுகிறது. அரசு சட்டக்கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைக்கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்க கோரி அனைத்து கல்லுரி மாணவர்களும் போராடி வருகிறார்கள். இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு கல்லூரிகளின் இயக்குனர் மஞ்சுளா கூறுகையில், “தமிழ்நாடு முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் அந்தந்த கல்லூரி முதல்வர்கள் விடுமுறை விடலாம். அதாவது திங்கட்கிழமை வரை அல்லது பிரச்சினை தீரும் வரை காலவரையற்ற விடுமுறை விடலாம். இது அந்தந்த கல்லூரி முதல்வர்களின் முடிவை பொறுத்தது” என்று தெரிவித்தார்.

பொறியியல் கல்லூரிகள்

கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, கட்டிடக் கல்லூரி, குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரிக்கு இன்றும், நாளையும் விடுமுறைவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக அந்தந்த கல்லூரி முதல்வர்கள் முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள அரசு காயிதே மில்லத் கல்லூரி, பாரதி பெண்கள் கல்லூரி, டாக்டர் அம்பேத்கர் கலைக்கல்லூரி, மாநில கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கலைக்கல்லூரி, புதுக் கல்லூரி, ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, செல்லம்மாள் பெண்கள் கல்லூரி, டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி உள்பட 31 கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறைவிடப்பட்டுள்ளது.

சட்டக்கல்லூரிகள்

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சட்டக்கல்லூரிகளுக்கும், சட்டக்கல்லூரிகளின் விடுதிகளுக்கும் இன்றும், நாளையும் விடுமுறை விடப்பட்டுள்ளது என்று சட்டக்கல்வி இயக்குனர் சந்தோஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் சீர்மிகு சட்டக்கல்லூரிக்கும் இன்றும், நாளையும் விடுமுறைவிடப்பட்டுள்ளது.

மருத்துவ கல்லூரிகள்

தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு அந்தந்த பகுதி நிலைமைக்கு ஏற்ப விடுமுறைவிட கல்லூரியின் முதல்வர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Next Story