நாகையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் உண்ணாவிரதம்


நாகையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 19 Jan 2017 5:49 AM IST (Updated: 19 Jan 2017 5:49 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் ஜல்லிக் கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர் கள் நடத்திய உண்ணாவிரதத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நாகப்பட்டினம்,

போராட்டங்கள்

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. அதைதொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்தநிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள், பல்வேறு கட்சியினர், அமைப்பினர் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் மத்திய, மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவை தடை செய்யக்கோரியும் இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஆங்காங்கே உண்ணாவிரதம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

உண்ணாவிரதம்

இந்த நிலையில் நாகையில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. மேலும் கடந்த சில தினங்களாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று நாகையில் பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்கள் தனித்தனியாக போராட்டங்களை நடத்தினர். நாகை தலைமை தபால் நிலையம் முன்பு மாணவர் அமைப்பினர் மற்றும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகையில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று தபால் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர். பின்னர் பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும், ஜல்லிக்கட்டை நடத்த அவசர சட்டம் இயற்றக்கோரியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்ததால் நாகை - திருவாரூர் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதைதொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வாகனங்களை மாற்று வழியில் திருப்பிவிட்டனர். போராட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில விவசாய அணி செயலாளர் முபாரக் தலைமையில் மாவட்ட செயலாளர் ரீகாசுதீன், பொருளாளர் ரபிக், தலைமை செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அப்துரஹ்மான் மற்றும் நகர நிர்வாகிகள், நாம் தமிழர் கட்சி நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்க நிறைந்தசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேதாரண்யம்

இதேபோல வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன்பு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் அலங்காநல்லூரில் ஜல்லிக் கட்டு நடத்த போராட்டம் நடத்தி கைதான அனைவரையும் விடுதலை செய்து அவர் கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேதாரண்யம் விவசாய சங்கம், வணிகர் சங்கம், முகநூல் நண்பர்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பதாகைகளை ஏந்தி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஆயக்காரன்புலம், மருதூர், வாய்மேடு, தாணிக்கோட்டகம், செம்போடை, வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து கல்லூரி, பள்ளி மாணவர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

பொறையாறு

ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் பொறையாறில் உள்ள ஒரு கல்லூரியை சேர்ந்த மாணவிகள் 600-க்கும் மேற்பட்டோர் நேற்று வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று புதிய பஸ் நிலையத்தை அடைந்தனர். பின்னர் அங்கு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஜல்லிக்கட்டு நடத்த உடனே அனுமதி வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர். அதன் பின்னர் மதியம் 2 மணி அளவில் மாணவிகள் கலைந்து சென்றனர்.

இதேபோல் பொறையாறு அருகே காழியப்பநல்லூரில் உள்ள ஒரு தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 250-க்கும் மேற்பட்டோர் திருக்கடையூர் கடைவீதியில் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேல் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story