ஊட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம்


ஊட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 19 Jan 2017 6:00 AM IST (Updated: 19 Jan 2017 5:54 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி ஊட்டியில் கல்லூரி மாணவர் கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரி மாணவர்கள் போராட்டம்

தமிழர்களின் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்ததை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. இதனால் தமிழக மக்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். இந்த நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பு நிலவுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் தொடர் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் ஊட்டி அருகே உள்ள கேத்தி தனியார் கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.

இதையடுத்து, காலை 9 மணி முதலே கல்லூரி மாணவ-மாணவிகள் வரத்தொடங்கினர். காலை 10 மணிக்கு ஏராளமான மாணவர்கள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் பீட்டா அமைப்பு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். இதனை தொடர்ந்து கல்லூரி முதல்வர் ஜான் ஓரல் பாஸ்கர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் உள்ளிட்டோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த மாணவர்கள் தங்களது வகுப்புகளுக்கு திரும்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோத்தகிரி

கோத்தகிரி மக்கள் கூட்டமைப்பு சார்பில் பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரி கோத்தகிரி மார்க்கெட் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள், தமிழ் விடுதலைப்புலிகள் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் குறித்து கோத்தகிரி மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கோத்தகிரியில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பீட்டா அமைப்பை இந்தியாவில் தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story