மாவட்டம் முழுவதும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம்


மாவட்டம் முழுவதும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Jan 2017 6:15 AM IST (Updated: 19 Jan 2017 6:15 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்,

பரமத்தி வேலூர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வழங்கப்படும் என தமிழகம் முழுவதும் உள்ள ஜல்லிக்கட்டு வீரர்களும், தமிழ் மக்களும் எதிர் பார்த்திருந்த நிலையில் இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து மத்திய, மாநில அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பலர் பல்வேறு வகையில் போராடி வருகின்றனர். இந்த நிலையில் பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள இளைஞர்கள் சிலர் வாட்ஸ்-அப் மற்றும் முகநூல் மூலம் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்தும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் எனக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து நேற்று பரமத்தி வேலூர் சிவா திரையரங்கு நான்கு சாலை அருகே நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு நாட்டு மாடுகளை அழிக்க வேண்டாம். தமிழர்களின் வீர விளையாட்டை அழிக்க வேண்டாம். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டிற்காக போராடி வருவோர் மீது வழக்குப்பதிவு செய்யக்கூடாது, தாய்ப்பால் கொடுக்கும் பசுவை வதை செய்ய வேண்டாம். பீட்டா அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசாரை கண்டிப்பது உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பினர். இதில் பரமத்தி வேலூரில் உள்ள தனியார் கல்லூரி, பரமத்தி அருகே உள்ள தனியார் கல்லூரி, கரூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் அரசு கல்லூரி

நாமக்கல் அடுத்துள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் முன்பு மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் பீட்டா அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

குமாரபாளையம்

குமாரபாளையம் அருகே உள்ள எதிர்மேடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் நேற்று காலை கல்லூரியின் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் பீட்டா அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் குமாரபாளையம் அருகே உள்ள லட்சுமி நகரில் கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்செங்கோடு

திருச்செங்கோடு அருகே தோக்கவாடி யில் உள்ள தனியார் கல்லூரியின் முன்பு நேற்று காலை சுமார் 700 மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கும், விவசாயிகளுக்கும் ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும். உடனடியாக ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல திருச்செங்கோடு பழைய பஸ் நிலையம் பக்கமுள்ள அண்ணா சிலை அருகே கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் சுமார் 300 பேர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

ராசிபுரம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ராசிபுரம் அருகே ஆண்டகளூர்கேட்டில் உள்ள திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி அருகில் ராசிபுரம் மற்றும் மல்லசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய தட்டிகளை அவர்கள் கையில் வைத்திருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் மதியம் 1 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர்.

அதேபோல் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்பை புறக்கணிப்பு செய்து விட்டு கல்லூரிக்கு உள்ளேயே நுழைவாயிலின் அருகில் நின்று போராட்டம் நடத்தி கோஷங்களை எழுப்பினார்கள். பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.

ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகில் நடிகர் விஜய் இயக்கத்தினர் அதன் தலைவர் செந்தில்நாதன் தலைமையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதேபோல் ராசி புரம் அருகேயுள்ள பட்டணத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ராஜூ தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

பள்ளிபாளையம்

பள்ளிபாளையத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கலந்துகொள்ள அக்ரஹாரம், ஆவத்திபாளையம் பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக பஸ்நிலைய 4 ரோடுக்கு வந்தனர். அங்கு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல பள்ளிபாளையம் அருகே வெப்படை பஸ் நிலைய 4 ரோட்டில் இளைஞர்கள் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story