கணவருடன் சேர்ந்து மூதாட்டியை தாக்கி 4 பவுன் நகையை பறித்த பேத்தி


கணவருடன் சேர்ந்து மூதாட்டியை தாக்கி 4 பவுன் நகையை பறித்த பேத்தி
x
தினத்தந்தி 20 Jan 2017 3:30 AM IST (Updated: 19 Jan 2017 10:19 PM IST)
t-max-icont-min-icon

வடவள்ளியில் கணவருடன் சேர்ந்து மூதாட்டியை தாக்கி, 4 பவுன் நகையை பேத்தி பறித்து சென்றார்.

வடவள்ளி,

மூதாட்டி

கோவை வடவள்ளி ஜெயா நகரை சேர்ந்தவர் சாமி. இவரது மனைவி பாஞ்சாலி (வயது 80). இவர்களுக்கு பாஸ்கரன், பாலகிருஷ்ணன் என்ற 2 மகன்கள் உள்ளனர். சாமி இறந்துவிட்டதால் பாஞ்சாலி அதே பகுதியில் உள்ள தனது மூத்த மகன் பாஸ்கரனின் வீட்டில் வசித்து வந்தார். பாஸ்கரன் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தபால் நிலையத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இதற்கிடையே பாலகிருஷ்ணனுக்கும், பாஞ்சாலிக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பாஞ்சாலி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது பாலகிருஷ்ணனின் மகள் சுபாஷினி (18) மற்றும் அவரது கணவர் விஜய் (24) ஆகியோர் வீட்டிற்கு வந்தனர். உடனே அவர்களை உபசரித்த பாஞ்சாலி, அவர்களுக்கு காபி போட்டு கொடுப்பதற்காக சமையலறைக்கு சென்றார்.

நகையை பறித்தனர்

அவரது பின்னால் சென்ற சுபாஷினி, விஜய் ஆகியோர் பாஞ்சாலியை கீழே தள்ளி, கைகளால் சரமாரியாக தாக்கினர். இதில் காயம் அடைந்து அலறிய பாஞ்சாலி, சிறிது நேரத்தில் மயங்கினார். பின்னர் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலி, வளையல், கம்மல் உள்பட 4 பவுன் தங்க நகையை பறித்து விட்டு, தம்பதியர் தப்பி சென்றனர். இதற்கிடையே சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் பாஸ்கரனின் வீட்டிற்கு வந்தனர். அப்போது பாஞ்சாலி மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து பேத்தியையும் , அவரது கணவரையும் வலைவீசிதேடி வருகின் றனர்.

Next Story