கடை வாடகை வசூலிக்காததால் நிதி நெருக்கடி மின்கட்டணம் செலுத்தாததால் ஊட்டி நகராட்சிக்கு ரூ.40 லட்சம் அபராதம்


கடை வாடகை வசூலிக்காததால் நிதி நெருக்கடி மின்கட்டணம் செலுத்தாததால் ஊட்டி நகராட்சிக்கு ரூ.40 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 20 Jan 2017 3:45 AM IST (Updated: 19 Jan 2017 10:21 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட கடைகளில் வாடகைகள் வசூலிக்காததால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

ஊட்டி,

புதிய வாடகை

ஊட்டி நகராட்சிக்கு சொந்தமாக நகர் முழுவதும் சுமார் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகள் அனைத்திற்கும் புதிய வாடகை கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் உயர்த்தப்பட்டது. இதன்படி ஆண்டிற்கு ரூ.3 கோடி வருவாயாக இருந்த வாடகை ரூ.12 கோடி அளவிற்கு உயர்த்தப்பட்டது. இந்த உயர்த்தப்பட்ட வாடகை கடந்த செப்டம்பர் மாதம் முதல் வியாபரிகள் செலுத்த வேண்டும்.

இந்த உயர்த்தப்பட்ட வாடகை மிகவும் அதிகமாக இருப்பதாக கூறி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் நகராட்சி அதிகாரிகள் ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நகராட்சிக்கு இந்த வாடகை உயர்வு மூலம் நல்ல வருவாய் கிடைப்பதோடு, இந்த வாடகை உயர்வு தனியார் கடைகளுடன் ஒப்பிடும்போது குறைவாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஒப்புதல் கடிதம்

இதனிடையே புதிய வாடகை உயர்வுக்கு ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஒப்புதல் கடிதத்தை நகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் முதல் நகராட்சிக்கு உட்பட்ட கடைகளுக்கு புதிய வாடகையோ அல்லது பழைய வாடகையோ நகராட்சி அதிகாரிகள் வாங்காமல் உள்ளனர். இதுகுறித்து ஒரு அதிகாரி கூறியதாவது:-

ஊட்டி நகராட்சிக்குப்பட்ட பல்வேறு சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும் நடைபாதை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வருவாய் பற்றாக்குறை காரணமாக செய்து கொடுக்க முடியாமல் உள்ளது.

இந்த நிலையில் நகராட்சி ஊட்டி மின்வாரியத்திற்கு ரூ.8 கோடியே 60 லட்சம் மின்கட்டணம் செலுத்த வேண்டியது உள்ளது. இந்த கட்டணத்தை செலுத்தாததால் நகராட்சிக்கு ரூ.40 லட்சம் அபராதமாக மின்வாரியம் விதித்து உள்ளது. இதனால் நகராட்சி கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. உயர்த்தப்பட்ட வாடகையை வியாபாரிகளிடம் இருந்து வசூலித்தாலே ரூ.12 கோடி வைப்பு தொகையாகவும், ரூ.6 கோடி கூடுதல் வருவாய் என மொத்தம் ரூ.18 கோடி கிடைக்கும். இதன்மூலம் நகராட்சியின் நிதி பற்றாக்குறை தீர வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நகராட்சி நிதி நெருக்கடியில் இருந்து மீளும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story