கூடுதல் விலை கொடுத்து லாரிகள் மூலம் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்


கூடுதல் விலை கொடுத்து லாரிகள் மூலம் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்
x
தினத்தந்தி 20 Jan 2017 4:00 AM IST (Updated: 20 Jan 2017 12:03 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை பகுதியில் விதை நெல்லுக்காக கடைசி கட்ட முயற்சியாக விவசாயிகள்

மானாமதுரை,

கருகிய பயிர்கள்

மானாமதுரை பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் நாளுக்குநாள் சாகுபடி பரப்பளவு பெருமளவு குறைந்து வருகிறது. வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதால் பெரும்பாலான விவசாயிகள் நெல் நடவு பணிகளில் ஈடுபடவில்லை. மானாமதுரை பகுதியில் வைகை ஆற்று பாசனம் ஒரு சில பகுதிகளில் மட்டுமே உள்ளது மற்ற பகுதிகளில் வானம் பார்த்த பூமிதான். இருப்பினும் சில இடங்களில் விவசாயிகள் கிணற்று நீரை நம்பி நெல் நடவு பணிகளில் ஈடுபட்டனர். தொடர்ச்சியாக மழை இல்லாததால் கிணறுகளிலும் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் கிணற்று நீர் உள்ள விவசாயிகள் மற்ற விவசாயிகளுக்கு தண்ணீர் தர மறுத்து விட்டனர். இந்தநிலையில் தற்போது நெல் நடவு செய்து 45 நாட்களாகிவிட்டன. நெல் பால் பிடிக்கும் தருணத்தில் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகி வருகின்றன.

விலை கொடுத்து தண்ணீர்

மானாமதுரை பகுதி விவசாயிகள் விதை நெல் வெளியில் வாங்குவதில்லை. தங்களது நிலத்தில் விளையும் நெல்லில் ஒரு பகுதியை விதை நெல்லிற்கு எடுத்து வைத்து கொள்வது வழக்கம். இதனால் விதை நெல்லுக்காக கடைசி கட்ட முயற்சியாக மானாமதுரையை அடுத்த கல்குறிச்சி, புளிக்குளம், சின்னகண்ணணூர் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் கருகி வரும் நெற்பயிர்களை காப்பாற்ற டிராக்டர் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். ஒரு லாரி டேங்க் தண்ணீரை ரூ.500 என கொடுத்து தண்ணீர் பாய்ச்சுகின்றனர். ஏக்கருக்கு 8 முதல் 15 முறை லாரிகள் மூலம் தண்ணீர் பாய்ச்சினால் மட்டுமே விளைச்சல் காணும் என்பதால் விவசாயிகள் வேறு வழியின்றி கூடுதல் விலை கொடுத்து தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

இழப்பீடு வழங்க வேண்டும்

இதுகுறித்து கல்குறிச்சி ராஜையா என்பவர் கூறும்போது, ஒரு ஏக்கருக்கு நெற்பயிரை நான் நடவு செய்தேன். ரூ.15 ஆயிரம் செலவானது. நன்கு பயிர் வளர்ந்துள்ள நிலையில் தற்போது தண்ணீரின்றி கருக தொடங்கிவிட்டது. வேறு வழியின்றி பயிர்களை காப்பாற்ற லாரிகள் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றேன். விதை நெல் எடுக்கும் அளவிற்கு விளைச்சல் வந்தால் போதும் என்ற நிலையில் உள்ளேன் என்றார்.

முத்துப்பாண்டி என்பவர் கூறுகையில், கடுமையான வறட்சி காரணமாக நெற்பயிர் கருகுவதை கண்டு கூடுதல் விலை கொடுத்து தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றோம். அரசு வறட்சிக்கான இழப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும் என்றார்.

Next Story