ரூ.125¾ கோடி செலவில் 1,072 வீடுகள் பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்


ரூ.125¾ கோடி செலவில் 1,072 வீடுகள் பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
x
தினத்தந்தி 20 Jan 2017 4:00 AM IST (Updated: 20 Jan 2017 12:03 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு பெரியார் நகர், புதுமை காலனி, அழகரசன் நகர் ஆகிய பகுதிகளில் ரூ.125¾ கோடி செலவில் 1,072 வீடுகள் கட்டும் பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

ஈரோடு,

1,072 வீடுகள் இடிப்பு


ஈரோட்டில் கருங்கல்பாளையம் அழகரசன் நகர், புதுமை காலனி மற்றும் பெரியார் நகர் ஆகிய பகுதிகளில் வீட்டுவசதி வாரியத்தின் மூலம் கடந்த 1981–82–ம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டது. இதில் மொத்தம் 1,072 வீடுகள் ஆகும். இந்த வீடுகள் கட்டி 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆனதால் அனைத்து வீடுகளும் பழுதானது. சில வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிர்சேதமும் ஏற்பட்டது. அதனால் அவற்றை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்ட அரசு முடிவு செய்தது.

அதைத்தொடர்ந்து வீடுகளில் குடியிருந்தவர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டு அரசு நிவாரணமாக தலா ரூ.8 ஆயிரம் வழங்கப்பட்டது. பின்னர் வீடுகளின் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. கடந்த 2014–ம் ஆண்டு நவம்பர் மாதம் கருங்கல்பாளையம் அழகரசன் நகர் பகுதியில் கட்டப்பட்டு இருந்த குடியிருப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. பின்னர் புதுமை காலனி, பெரியார் நகரில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் இடிக்கப்பட்டன. மொத்தம் 3 மாதங்களில் 1,072 வீடுகளும் அகற்றப்பட்டன.

ரூ.125¾ கோடி...


அழகரசன் நகர், புதுமைகாலனி, பெரியார் நகர் ஆகிய பகுதிகளில் இடிக்கப்பட்ட வீடுகளை விரைந்து கட்டிக்கொடுக்க வேண்டும் என்று வீடுகளை இழந்தவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் குடிசைமாற்று வாரியத்துறை சார்பில் 1,072 வீடுகள் கட்ட ரூ.125 கோடியே 89 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வீடுகள் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் பணிகள் தொடக்க விழா ஈரோட்டில் நேற்று நடைபெற்றது.

விழாவில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், வீட்டுவசதி, நகர மேம்பாட்டுத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, இ.எம்.ஆர்.ராஜா என்கிற ராஜாகிருஷ்ணன், வி.பி.சிவசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

விழாவில் முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் கே.சி.பழனிச்சாமி, மனோகரன், முருகுசேகர், கேசவமூர்த்தி, ஜெகதீசன், இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பி.பி.கே.மணிகண்டன், மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், பெரியார் நகர் பகுதி அவைத்தலைவர் மீன்ராஜா என்கிற ராஜசேகர், காசிபாளையம் நகர இளைஞர் அணி செயலாளர் கேபிள்ரமேஷ், முன்னாள் கவுன்சிலர் காவிரி செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story