ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தங்கச்சிமடம் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தங்கச்சிமடம் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
x
தினத்தந்தி 20 Jan 2017 4:15 AM IST (Updated: 20 Jan 2017 12:09 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தங்கச்சிமடத்தில் இருந்து 400-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிப்பு

ராமேசுவரம்,

போராட்டம்

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்தும், பீட்டா அமைப்பை தடைசெய்ய வலியுறுத்தியும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் தென்குடா பகுதியில் கல்லூரி மாணவர்கள் 400-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், பீட்டா அமைப்பை தடைசெய்ய வலியுறுத்தியும், ஜல்லிக்கட்டு நடத்த உடனடியாக அனுமதி வழங்க வலியுறுத்தியும் வகுப்புகளை புறக்கணித்து தங்கச்சிமடத்தில் இருந்து கோஷம் போட்ட படி ஊர்வலமாக நடந்தே ராமநாதபுரம் சென்றனர். பாம்பன் ரோடு பாலம், மண்டபம், மண்டபம் முகாம், உச்சிப்புளி ஆகிய ஊர்கள் வழியாக வழியாக 55 கிலோ மீட்டர் தூரம் ராமநாதபுரம் வரை நடந்தே சென்று ராமநாதபுரம் அம்மா பூங்காவில் நடந்த இளைஞர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலமாக சென்ற மாணவர்களின் பாதுகாப்பிற்காக ராமேசுவரம் போலீஸ் சூப்பிரண்டு முத்துராமலிங்கம் தலைமையில் ஏராளமான போலீசார் உடன்சென்றனர்.

மணமக்கள்

இதேபோல் நேற்று பாம்பனில் உள்ள தூயஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பாம்பன் நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் எஸ்.பி.ராயப்பன் என்பவருடைய மகன் பிரடிசனுக்கும், அதே பகுதியை சேர்ந்த அருளப்பன் என்பவரது மகள் மரியசாண்ட்ரோசுக்கும் திருமணம் முடிந்து ஆலயத்தில் இருந்து சாலை வழியாக பாம்பனில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

அப்போது பாம்பன் பஸ் நிறுத்தம்அருகில் 40-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்தும், பீட்டாஅமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி கொண்டிருந்தனர். அந்த வழியாக ஊர்வலமாக வந்த மணமக்கள் இளைஞர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் கூடங்குளம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், எழுத்தாளர் ஜோடிகுரூஸ், சின்னத்தம்பி உள்பட ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

அறப்போராட்டம்

கமுதியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் கமுதி நகர் அனைத்து சமுதாய மக்கள் சார்பில் மருதுபாண்டியர் சிலை எதிரில் அறப்போராட்டம் நடைபெற்றது. இதில் வியாபாரிகள் சங்க துணை தலைவர் ராமநாதன், அகமுடையார் நிர்வாகிகள் ரகு, ராஜேந்திரன், குருசாமி, முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள், மறவர் சங்கம் சார்பில் ராமச்சந்திர பூபதி, போஸ், வெள்ளாளர் சங்கம் சார்பில் நாகலிங்கம், முத்துவேல், தி.மு.க. சார்பில் பெருநாழி சேகர் என்ற ராமச்சந்திரன், விஜயன், பா.ஜ.க. சார்பில் கணபதி, பொன் ஆறுமுகம் உள்பட அனைத்து சமுதாய பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கமுதி கோட்டைமேட்டில் உள்ள கல்லூரியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கமுதி, அபிராமம் பகுதிகளில் ஊர்வலமாக சென்று தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தினர். இதனையொட்டி காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Next Story