தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Jan 2017 4:00 AM IST (Updated: 20 Jan 2017 12:23 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வர வேண்டும்

தேனி,

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தேனி மாவட்டத்திலும் போராட்டம் வலுவடைந்து உள்ளது. இதன் தொடர்ச்சியாக, தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம், ஓய்வுபெற்ற பள்ளி–கல்லூரி ஆசிரியர் சங்கம் ஆகியவை சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தேனி மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி பேசினார்.

அவசர சட்டம் வேண்டும்

அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முகமதுஅலி ஜின்னா, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கிருஷ்ணசாமி, அனைத்து ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, ‘ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்க வேண்டும். மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். பீட்டா அமைப்பை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டு இருக்கும் போதே, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து, சிறிது நேரத்தில் ஆர்ப்பாட்டத்தை முடித்து கொண்டனர். இந்த போராட்டத்தில் 250–க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

Next Story