ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி செங்கோட்டையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்த இளைஞர்கள்


ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி செங்கோட்டையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்த இளைஞர்கள்
x
தினத்தந்தி 20 Jan 2017 1:45 AM IST (Updated: 20 Jan 2017 12:58 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி செங்கோட்டையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

நெல்லை,

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி செங்கோட்டையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதே போல் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது.

ரெயில் மறியல்


ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று போராட்டம் நடந்தது. செங்கோட்டை காந்தி சிலை முன்பு நேற்று மாலை 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டனர். அவர்கள் மத்திய அரசை கண்டித்தும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு, கோஷங்கள் எழுப்பினார்கள். போராட்டத்தை தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் செங்கோட்டை ரெயில் நிலையத்திற்கு சென்றனர்.

அங்கு இருந்து சென்னைக்கு புறப்பட தயாராக இருந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலை மாலை 5.50 மணி அளவில் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைந்து போகச் செய்தனர். இதனால் 25 நிமிடம் நடந்த இந்த ரெயில் மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ரெயில் சற்று நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

களக்காடு-முக்கூடல்

களக்காட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

முக்கூடல் நீர்த்தேக்க திடலில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆலங்குளம்-புளியங்குடி

ஆலங்குளத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக சேவல் சண்டை மற்றும் தொடர் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் அமைதி ஊர்வலம் நடத்தினர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து சேவல் சண்டை நடைபெற்றது. இதில் ச.ம.க. தொகுதி செயலாளர் ஜான்ரவி மற்றும் ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

புளியங்குடி சிந்தாமணி பஸ் நிலைய பகுதியில் மாணவ- மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதில் புளியங்குடி வீராச்சாமி செட்டியார் பொறியியல் கல்லூரி, புளியங்குடி மனோ பொறியியல் கல்லூரி, வாசுதேவநல்லூர் மகாகவி பாரதியார் பொறியியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக செல்ல முயன்ற போது புளியங்குடி போலீசார் மாணவ- மாணவிகளை தடுத்து நிறுத்தினர்.

பணகுடி

பணகுடியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுரண்டை-நாங்குநேரி

சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி மாணவ- மாணவிகள் நேற்று காலை முதல் வகுப்புகளுக்கு செல்லாமல் புறக்கணித்துவிட்டு கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுரண்டை அண்ணா சிலை அருகே சுரண்டை சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.

திருவேங்கடம் மெயின் பஜாரில் உள்ள காந்தி மண்டபம் முன்பு மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாங்குநேரியில் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகிரி பஸ் நிலையம் அருகே மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும், பீட்டாவை ஒழிக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

Next Story