ஒன்றாக இருந்து சாப்பிடுவதில் ஏற்பட்ட பிரச்சினை: கணவனை மிரட்ட தீக்குளித்த புதுப்பெண் உடல் கருகியது


ஒன்றாக இருந்து சாப்பிடுவதில் ஏற்பட்ட பிரச்சினை:  கணவனை மிரட்ட தீக்குளித்த புதுப்பெண் உடல் கருகியது
x
தினத்தந்தி 20 Jan 2017 1:03 AM IST (Updated: 20 Jan 2017 1:03 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் திருமணமான 4 மாதத்தில் ஒன்றாக இருந்து சாப்பிடுவதில் ஏற்பட்ட பிரச்சினை

அனுப்பர்பாளையம்

காதல் திருமணம்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வன் (வயது 23). இவரும் அதே பகுதியை சேர்ந்த சரண்யா (21) என்ற பெண்ணும் காதலித்து பின்னர் பெற்றோர் அனுமதியுடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மனைவியை அழைத்து கொண்டு திருப்பூர் வந்த கலைசெல்வன் பி.என்.ரோடு பாண்டியன்நகர் நல்லப்பா நகரில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். மேலும் கணவன், மனைவி இருவரும் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று கலைசெல்வனும், சரண்யாவும் அருகில் உள்ள கலைசெல்வனின் அண்ணன் வீட்டுக்கு விருந்துக்கு சென்றுள்ளனர். அங்கு சாப்பிட்ட பின்பு இரவில் இருவரும் அவர்களுடைய வீட்டுக்கு திரும்பி உள்ளனர். வீட்டுக்கு சென்றதும் கலைசெல்வன் மனைவியிடம் இருவரும் சேர்ந்து சாப்பிடலாம் வா என்று அழைத்துள்ளார். அதற்கு சரண்யா இப்போதுதான் உங்கள் அண்ணன் வீட்டில் சாப்பிட்டோம். எனக்கு பசியில்லை. எனவே நீங்கள் சாப்பிடுங்கள் என்று கணவரிடம் கூறி உள்ளார்.

தீக்குளித்தார்

ஆனால் கலைசெல்வன் சரண்யாவை இருவரும் சேர்ந்து சாப்பிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த சரண்யா, கணவனை மிரட்டுவதற்காக குளியலறைக்கு சென்ற அவர் அங்கு ஒரு கேனில் இருந்த மண்எண்ணெயை எடுத்து அவர் உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

இதையடுத்து சரண்யா உடலில் தீ மளமளவென பற்றி எரிந்தது. இதனால் அவர் வலியால் அலறி துடித்தார். மனைவியின் அலறல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த கலைசெல்வன், சரண்யாவை காப்பாற்ற முயற்சி செய்து அவர் அருகில் சென்றுள்ளார். அப்போது கலைசெல்வன் உடலிலும் தீப்பற்றி கொண்டது. அவரும் வலியால் அலறி துடித்தார். அவர்களுடைய சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை உடனடியாக மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை

பின்னர் அவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் கணவரை மிரட்டுவதற்காக தீக்குளித்து உடல் கருகிய மனைவியை காப்பாற்ற முயன்ற கணவரும் உடல் கருகி படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story