கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் கொடிமரம் அமைக்கப்பட்டது


கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் கொடிமரம் அமைக்கப்பட்டது
x
தினத்தந்தி 20 Jan 2017 4:00 AM IST (Updated: 20 Jan 2017 1:37 AM IST)
t-max-icont-min-icon

கங்கைகொண்ட சோழ புரம் பிரகதீஸ்வரர் கோவிலில் கொடிமரம் அமைக்கப்பட்டது.

மீன்சுருட்டி,

பிரகதீஸ்வரர் கோவில்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜராஜசோழன் மகன் ராஜேந்திர சோழனால் கங்கை நதி வரை படையெடுத்து வெற்றி பெற்றதன் நினைவாக கட்டப் பட்டது.

உலக புராதன சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட இக்கோவில் சிறந்த ஆன்மிக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இக்கோவிலில் கொடிமரம் பல ஆண்டுகளாக இல்லாமல் இருந்தது.

கொடிமரம்

இதையடுத்து சங்கரமட கமிட்டியினர் முயற்சியில் கொடிமரம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. கொடிமரம் செய்வதற்கான வேங்கை மரம் இந்தோனேசியாவில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அந்த வேங்கை மரம் 52 அடி நீளத்தில் 7 டன் எடை கொண்டதாக இருந்தது. அது தூத்துக்குடியில் இருந்து பெரிய லாரி மூலம் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு கடந்த மாதம் எடுத்து வரப்பட்டது.

பின்னர் அந்த மரத்தில் கொடிமரம் சிற்பிகளால் செதுக்கப்பட்டது. 6.9 அடி உயர பீடத்தின் மீது 43.8 அடி உயரத்தில் கொடிமரம் அமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

கிரேன் மூலம்...

இதையடுத்து கொடி மரத்தை பிரகதீஸ்வரர் கோவிலின் முன்புறத்தில் உள்ள கல் பீடத்தில் அமைக்கும் பணி நேற்று நடந்தது. நேற்று காலை 9.30 மணியளவில் கொடிமரம் கிரேன் மூலம் தூக்கப்பட்டு கல் பீடத்தில் அதன் நிலையில் நிறுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் ரமேஷ், தொல்லியல் துறை அலுவலர் சந்திரசேகர், காஞ்சி சங்கரமட கமிட்டி நிர்வாகிகள் ஜடாதரன், ரவிசங்கர், கோமதிநாயகம், கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழும தலைவர் பொறியாளர் கோமகன், மகாதேவன், சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் கங்கைகொண்டான் கழகம் சார்பில் கொடிமரத்தை வழங்கிய சிங்கப்பூரை சேர்ந்த பொறியாளர் புருசோத்தமன் மற்றும் ஏராளமான பக்தர்கள், சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டனர்.

Next Story