ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மாநிலம் முழுவதும் தமிழர்கள் போராட்டம் மும்பையில் காளையுடன் ஆர்ப்பாட்டம்


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மாநிலம் முழுவதும் தமிழர்கள் போராட்டம் மும்பையில் காளையுடன் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Jan 2017 4:15 AM IST (Updated: 20 Jan 2017 3:32 AM IST)
t-max-icont-min-icon

மும்பை உள்பட மராட்டியத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடந்தது. காந்திவிலியில் தமிழர்கள் காளை மாடுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்பை,

மும்பை உள்பட மராட்டியத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடந்தது. காந்திவிலியில் தமிழர்கள் காளை மாடுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காளை மாடுடன் ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தில் நடந்து வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மும்பையிலும் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று இந்த போராட்டம் மராட்டியம் முழுவதும் தீவிரம் அடைந்தது.

மும்பை காந்திவிலியில் மாநில தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காந்திவிலி பகுதியில் பப்ரோகர் நகரில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர்கள் காளை மாடுடன் கலந்துகொண்டனர்.

தானேயில்...


இதுபோல தானே மாவட்டம் அம்பர்நாத் மேற்கு பகுதியில் நகராட்சி அலுவலகம் முன் தமிழ் வாலிபர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுவாமிநகர் வர்ச்சாபாடாவில் இருந்து அம்பர்நாத் நகராட்சி அலுவலகம் வரை பேரணியாக வந்தனர். பின்னர் அவர்கள் நகராட்சி அலுவலகம் முன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பீட்டாவை தடைசெய்ய வேண்டும், ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

மேலும் தானே மாவட்டம் டிட்வாலா பகுதியில் ரெயில்வே கேட் பகுதியில் ஏராளமான தமிழர்கள் திரண்டனர். அவர்கள் அந்த வழியாக ரெயிலை விடாத படி தண்டவாளத்தில் மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புனே

புனேயிலும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் நடந்தது. பிம்பிரி பகுதியில் உள்ள பாபாசாகேப் அம்பேத்கர் சவுக் பகுதியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன.

Next Story