ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு சென்று வந்த கல்லூரி மாணவி லாரி மோதி சாவு வாலிபர் காயம்


ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு சென்று வந்த கல்லூரி மாணவி லாரி மோதி சாவு வாலிபர் காயம்
x
தினத்தந்தி 20 Jan 2017 3:33 AM IST (Updated: 20 Jan 2017 3:33 AM IST)
t-max-icont-min-icon

மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்துகொண்டு விட்டு மோட்டார்சைக்கிளில் வந்த கல்லூரி மாணவி டிப்பர் லாரி மோதி இறந்தார்.

ஆலந்தூர்,

மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்துகொண்டு விட்டு மோட்டார்சைக்கிளில் வந்த கல்லூரி மாணவி டிப்பர் லாரி மோதி இறந்தார். அவருடன் வந்த வாலிபர் காயம் அடைந்தார்.

லாரி மோதியது

சென்னையை அடுத்த பொழிச்சலூர் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி (வயது 19). இவர் கிண்டியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மெரினாவில் ஜல்லிக் கட்டு போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருமுடிவாக்கத்தை சேர்ந்த வீரவேலு (26) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

பின்னர் போராட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு மீண்டும் வீட்டிற்கு அவர்கள் புறப்பட்டனர். அப்போது மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் வந்தபோது பின்னால் வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

டிரைவர் கைது

இதில் கீழே விழுந்த வைஷ்ணவியின் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கிது. இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். காயம் அடைந்த வீரவேலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுபற்றி பரங்கிமலை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் முருகேசன் (42) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story