தர்மபுரியில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்: ரூ.1.21 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்


தர்மபுரியில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்: ரூ.1.21 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 27 Jan 2017 4:30 AM IST (Updated: 26 Jan 2017 9:54 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலெக்டர் விவேகானந்தன்

தர்மபுரி,

தேசிய கொடியை ஏற்றி வைத்து பயனாளிகளுக்கு ரூ.1.21 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

குடியரசு தின விழா

தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. காலை 8.05 மணிக்கு மாவட்ட கலெக்டர் விவேகானந்தன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை பார்வையிட்டனர்.

அதைத்தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பதக்கங்களை கலெக்டர் வழங்கினார். பின்னர் காவல்துறை தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், சாரண–சாரணியர், ஊர்க்காவல் படை, தீயணைப்புத் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். இந்த அணிவகுப்பில் பாலக்கோடு, லளிகம் அரசு மேல்நிலைப்பள்ளிகள், தர்மபுரி விஜய் வித்யாலயா பள்ளி ஆகியவற்றை சேர்ந்த 130 மாணவ–மாணவிகள் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களுடைய வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி கலெக்டர் விவேகானந்தன் கவுரவித்தார்.

நலத்திட்ட உதவிகள்

இதைத்தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கலெக்டர் பாராட்டினார். பின்னர் வருவாய்த்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தாட்கோ, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மாவட்ட தொழில்மையம், புதுவாழ்வுத்திட்டம் உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் 192 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 21 லட்சத்து 3 ஆயிரத்து 800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து தர்மபுரி மாவட்ட சாரண, சாரணியர் இயக்கம், காரிமங்கலம் அனைவருக்கும் கல்வி இயக்க உண்டு உறைவிடப்பள்ளி, தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் பள்ளி, மொட்டலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 550 மாணவ–மாணவிகள் பங்கேற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளை அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

பரிசுகள்

அணி வகுப்பில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவ–மாணவிகளுக்கு கலெக்டர் விவேகானந்தன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர், தர்மபுரி எம்.எல்.ஏ. தடங்கம் சுப்ரமணி, திட்ட இயக்குனர் காளிதாசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, உதவி கலெக்டர்கள் ராமமூர்த்தி, கவிதா, மாவட்ட தொழிலாளர் அலுவலர் கோட்டீஸ்வரி, மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் சண்முகசுந்தரம், மாவட்ட விளையாட்டு அலுவலர் நஞ்சப்பன், தாசில்தார் சரவணன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், மாணவ–மாணவிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story