காலிங்கராயன் அணைக்கட்டில் மதகுகளை திறக்க மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டன


காலிங்கராயன் அணைக்கட்டில் மதகுகளை திறக்க மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டன
x
தினத்தந்தி 29 Jan 2017 4:08 AM IST (Updated: 29 Jan 2017 4:08 AM IST)
t-max-icont-min-icon

காலிங்கராயன் அணைக்கட்டில் மதகுகளை திறக்க ரூ.10 லட்சம் மதிப்பில் மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

காலிங்கராயன் வாய்க்கால்

பவானிசாகர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் ஆறு வழியாக பவானியில் உள்ள காலிங்கராயன் அணைக்கு வருகிறது. அங்கு உள்ள மதகுகள் வழியாக வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். சுமார் 56 மைல் நீளமுடைய காலிங்கராயன் வாய்க்கால் மூலம் 15 ஆயிரத்து 743 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

காலிங்கராயன் அணைக்கட்டில் மதகுகளை பராமரித்து மின்மோட்டார்கள் பொருத்த ரூ.10 லட்சம் அரசின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 6 மதகுகளும் சீரமைக்கப்பட்டன. மேலும், மதகுகளை எளிதாக திறப்பதற்கும், அடைப்பதற்கும் வசதியாக மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டன.

மின்மோட்டார்கள்

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

காலிங்கராயன் அணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வெளியேறும் பகுதியில் காங்கிரீட் தளம் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், அணைக்கு வரும் நுழைவு வாசல் பகுதியில் ‘வளைவு’ கட்டும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில் ரூ.10 லட்சம் மதிப்பில் அணையின் மதகுகளை சீரமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இதில் 6 மதகுகளுக்கும் தனித்தனி மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டன. மேலும், மின்மோட்டார்கள் மழையில் நனையாமல் இருக்க கூடாரமும் அமைக்கப்பட்டு உள்ளது.

காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடும் காலகட்டத்தில் முறை வைத்து திறக்கப்படுவதால் மதகுகளை அடிக்கடி இயக்க வேண்டிய நிலை உள்ளது. ஒவ்வொரு முறையும் கைகளால் திறந்துவிட வேண்டும். தற்போது மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டு உள்ளதால் எளிதாக பொத்தானை அழுத்தி மதகுகளை இயக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story