பெரம்பலூரில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 218 மனுக்கள் பெறப்பட்டன


பெரம்பலூரில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 218 மனுக்கள் பெறப்பட்டன
x
தினத்தந்தி 6 Feb 2017 10:15 PM GMT (Updated: 2017-02-07T01:51:32+05:30)

பெரம்பலூரில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 218 மனுக்கள் பெறப்பட்டன.

பெரம்பலூர்,

மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 218 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர்.

அரசு டவுன் பஸ்கள்...

பெரம்பலூர் அருகே சத்திரமனையை சேர்ந்த விவசாயிகள் திரண்டு வந்து அளித்த மனுவில், தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் விவசாய பணிகள் மேற்கொள்ள முடியாத சூழல் உள்ளது. எனவே எங்கள் பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதே போல் பெரம்பலூர் அருகே திருப்பெயர் கிராமத்தை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், திருப்பெயருக்கும், பெரம்பலூருக்கும் இடையே அரசு டவுன் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

நடவடிக்கை

பொதுமக்களிடம் மனுக் களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரர்களுக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ரோஸ்லின் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story