திருமணமான சில நாட்களில் கிணற்றில் பிணமாக மிதந்த புதுமாப்பிள்ளை கொலையா? போலீசார் விசாரணை


திருமணமான சில நாட்களில் கிணற்றில் பிணமாக மிதந்த புதுமாப்பிள்ளை கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 12 Feb 2017 3:45 AM IST (Updated: 12 Feb 2017 12:08 AM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே திருமணமான சில நாட்களில் புதுமாப்பிள்ளை கிணற்றில் பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரிமங்கலம்,

புதுமாப்பிள்ளை

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள முக்குலம் ஊராட்சி குட்ட காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன் (வயது30) விவசாயி. இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை சேர்ந்த முருகம்மாள்(21) என்ற பெண்ணுக்கும் கடந்த 1–ந்தேதி திருமணம் நடைபெற்றது. புதுமண தம்பதிகளான பரசுராமனும், முருகம்மாளும் மறு அழைப்பு நிகழ்ச்சியை முடித்து கொண்டு நேற்று முன்தினம் குட்டகாட்டூருக்கு வந்தனர்.

பரசுராமனின் பெற்றோர் காவேரிப்பட்டணத்தில் உறவினர் இறந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டனர். வீட்டில் இருந்த புதுமாப்பிள்ளை பரசுராமன் மனைவியிடம் வெளியில் சென்று வருவதாக கூறி சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய அவருடைய பெற்றோரிடம் முருகம்மாள் இதுகுறித்து தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து அவர்கள் உறவினர்கள், நணபர்கள் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புதுமாப்பிள்ளையை தேடியும் கிடைக்கவில்லை.

கொலையா? போலீசார் விசாரணை

இந்தநிலையில் நேற்று காலை பரசுராமன் தோட்டத்தில் உள்ள கிணற்றில் பிணமாக மிதப்பது தெரியவந்தது. இதையறிந்த அவருடைய மனைவி முருகம்மாள் மற்றும் பெற்றோர், உறவினர்கள் விரைந்து சென்று கதறி அழுதனர். இதுகுறித்து காரிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் இருந்து பரசுராமனின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். பின்னர் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் வழக்குப்பதிவு செய்து புதுமாப்பிள்ளை பரசுராமன் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது கிணற்றில் தவறி விழுந்து இருந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான சில நாட்களில் புதுமாப்பிள்ளை கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியது.


Next Story