மொரப்பூர் வனப்பகுதியில் நீர்நிலைகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்


மொரப்பூர் வனப்பகுதியில் நீர்நிலைகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 12 Feb 2017 4:00 AM IST (Updated: 12 Feb 2017 12:17 AM IST)
t-max-icont-min-icon

வன விலங்குகளை பாதுகாக்க மொரப்பூர் வனப்பகுதியில் நீர்நிலைகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அரூர்,

இந்த பணியை வனத்துறை அலுவலர் செண்பகபிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடும் வறட்சி

தர்மபுரி மாவட்டம் அரூர், மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மான்கள், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில உள்ளன. இவைகள் அடிக்கடி தண்ணீர், உணவு தேடி ஊருக்குள் வந்து செல்கிறது. அப்போது வாகனங்களில் அடிபட்டும், கிணறு உள்ளிட்ட நீர்நிலைகளில் விழுந்து இறந்து வருகிறது. மேலும் மர்ம ஆசாமிகள் வனவிலங்குகளை வேட்டையாடி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில் தற்போது கடும் கடும் வறட்சி நிலவுவதால் வனப்பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதியில் இருந்து வன விலங்குகள் வெளியே வரத்தொடங்கி உள்ளன. வனவிலங்குகளை பாதுகாக்க வனத்துறை சார்பில் ஆங்காங்கே நீர்நிலைகள் அமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தண்ணீர் நிரப்பும் பணி

அதனை தொடர்ந்து வனத்துறை சார்பில் மொரப்பூர் வனப்பகுதியில் 2 இடங்களில் நீர்நிலைகள் அமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நீர்நிலைகளுக்கு டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விலங்குகளுக்காக அமைக்கப்பட்ட குழியில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த பணியை அரூர் மாவட்ட வன அலுவலர் செண்பகபிரியா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நீர்நிலைகளில் தண்ணீர் குடிக்க வரும் வனவிலங்குகளை மர்ம ஆசாமிகள் வேட்டையாடுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்று வனத்துறையினருக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது வனச்சரக அலுவலர்கள் கிருஷ்ணன், தங்கராஜி, வனவர் வேடிப்பன் ஆகியோர் உடன் சென்றனர்.

இதேபோன்று அரூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட காப்புக்காடுகளில் உள்ள நீர்நிலைகளில் டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் வனப்பகுதிகளில் இருந்து வரும் மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர் குடித்து விட்டு உற்சாகத்துடன் செல்கின்றன.


Next Story