தனியார் நிறுவன பொது மேலாளர் போலீசில் புகார் போலி கையெழுத்து போட்டு ரூ. 29 லட்சம் மோசடி
நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது ஒரு தனியார் நிறுவனம்.
கிருஷ்ணகிரி,
இந்நிறுவனத்தின் பொது மேலாளரான ஓசூரை சேர்ந்த பத்மா, கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:– எங்கள் நிறுவனத்தின் கிருஷ்ணகிரி கிளையில் மார்க்கெட்டிங் மேனேஜராக உடுமைலைபேட்டை அடுத்த புக்களம் கிராமத்தை சேர்ந்த அங்குராஜ் என்பவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 2015, 2016–ம் ஆண்டுகளில் எங்கள் நிறுவனத்திற்கு வரவேண்டிய ரூ. 29 லட்சத்து 22 ஆயிரத்தை போலி கையெழுத்து போட்டு பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த நிறுவனத்தின் உரிமையாளர் மணிகண்டன், கடந்த ஆண்டு மே மாதம் கிருஷ்ணகிரியில் உள்ள கிளை அலுவலக்தில் அங்குராஜிடம் விசாரித்தார். அப்போது தான் போலியாக பில் தயாரித்து, பணத்தை மோசடி செய்ததை ஒப்புக்கொண்டார். இதுவரை மோசடி செய்த பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார். மேலும் என்னை கொலை செய்துவிடுவேன் என்ற மிரட்டியதுடன், மோசடி செய்த பணத்தை கொடுக்காமல் உள்ள அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவின் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.