தம்பியை கொன்று தோட்டத்தில் புதைத்த விவசாயி ஒரு மாதத்திற்கு பின்பு சரண் அடைந்தார்


தம்பியை கொன்று தோட்டத்தில் புதைத்த விவசாயி ஒரு மாதத்திற்கு பின்பு சரண் அடைந்தார்
x
தினத்தந்தி 12 Feb 2017 4:00 AM IST (Updated: 12 Feb 2017 1:01 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம் அருகே அவரைக்காய் செடியை வெட்டிய தகராறு காரணமாக தம்பியை கொன்று தோட்டத்திலேயே புதைத்த விவசாயி ஒரு மாதத்திற்கு பிறகு கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தார்.

ராசிபுரம்,

அண்ணன்–தம்பி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா ஆயில்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஊனாந்தாங்கல் ஊராட்சி சின்ன வரகூர் கோம்பையை சேர்ந்தவர் காளிக்கவுண்டர். இவருக்கு பாப்பாத்தி என்ற மனைவியும், 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் இருந்தனர். காளிக்கவுண்டரின் மூத்த மகன் விவசாயியான வெங்கடாஜலம் (வயது 35) மற்றும் 2 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது.

காளிக்கவுண்டர் இறந்து விட்டதால் அவரது மனைவி பாப்பாத்தி மூத்த மகன் வெங்கடாஜலம் வீட்டில் தங்கி இருந்து வந்தார். 2–வது மகன் ரவி என்கிற செல்லப்பன் (25), சின்ன வரகூர்கோம்பையில் வெங்கடாஜலத்தின் வீட்டிற்கு அருகிலேயே வேறு ஒரு வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

வாலிபர் கொலை

கடந்த மாதம் (ஜனவரி) 1–ந் தேதி வெங்கடாஜலம் வீட்டிற்கு சென்ற ரவி அங்கிருந்த அவரைக்காய் செடியை வெட்டியதாக கூறப்படுகிறது. அதை கண்ட வெங்கடாஜலத்தின் மனைவி பழனியம்மாள் செல்லப்பனை திட்டியதாக தெரிகிறது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து பழனியம்மாள் வெங்கடாஜலத்திடம் கூறி உள்ளார். இது பற்றி கடந்த மாதம் 3–ந் தேதி ரவியிடம் வெங்கடாஜலம் விசாரித்து உள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கி கொண்டதில் வெங்கடாஜலத்தின் தலையில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடாஜலம் கடந்த மாதம் 6–ந் தேதி தம்பி ரவியை அடித்து கொலை செய்து, அவரது பராமரிப்பில் உள்ள தோட்டத்தில் புதைத்து விட்டதாக கூறப்படுகிறது.

கிராம நிர்வாக அலுவலரிடம் சரண்

கொலை நடந்து ஒரு மாதத்திற்கு மேலாகிய நிலையில் வெங்கடாஜலம் தனது தம்பி ரவியை கொலை செய்து விட்டதாக கூறி நேற்று ஊனாந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன் முன்னிலையில் சரண் அடைந்தார். இது பற்றி தகவல் அறிந்த ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் ஆயில்பட்டி போலீசார் வெங்கடாஜலத்திடம் தீவிர விசாரணை நடத்தினர்.

சரண் அடைந்த வெங்கடாஜலம் அளித்த தகவலின் அடிப்படையில் சின்ன வரகூர்கோம்பையில் புதைக்கப்பட்டு இருந்த ரவியின் பிணத்தை தோண்டி எடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் அங்கேயே உடலை பிரேத பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இன்று உடல் தோண்டி எடுப்பு

இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆயில்பட்டி போலீசார் வெங்கடாஜலத்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ரவியின் உடலை புதைத்து விட்டு, கொலையை மறைத்ததாக மேலும் 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். ரவியின் உடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தோண்டி எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அண்ணனே தம்பியை கொன்று புதைத்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story