11 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது சின்னக்கட்டளையில் 17–ந்தேதி ஜல்லிக்கட்டு
சேடபட்டி அருகே உள்ள சின்னக்கட்டளை கிராமத்தில் வருகிற 17–ந்தேதி ஜல்லிக்கட்டு நடக்கிறது.
உசிலம்பட்டி,
11 ஆண்டுகளுக்கு பிறகு
சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சின்னக்கட்டளை கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதனை தொடர்ந்து பல வருடங்களாக ஜல்லிக்கட்டு நடைபெறாமல் இருந்தது.
ஜல்லிக்கட்டிற்கான தடை நீங்கியதைத் தொடர்ந்து வருகிற 17–ந்தேதி சின்னக்கட்டளையில் புனுகு கருப்பசாமி கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. இக்கிராமத்தில் ஜல்லிக்கட்டு அறிவிக்கப்பட்டத்தைத்தொடர்ந்து கிராமம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
அரசு விதிப்படி வாடிவாசல், காளைகள் வெளியேறும் இடங்களின் தூரம், காளைகளை பிடிக்கும் வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள், பார்வையாளர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவைகளை பேரையூர் தாசில்தார் சிவக்குமார், கிராம நிர்வாக அலுவலர் சசிகலா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அனுமதியில்லைஇதுகுறித்து விழா கமிட்டியாளர்கள் கூறியதாவது‘:–
காளை வளர்ப்போர்அனைவருக்கும் முறைப்படி நோட்டீஸ் வழங்கப்பட்டு வரவேற்பு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மாடு பிடி வீரர்களுக்கும் அறிவிப்பு செய்யப்பட்டு வரவேற்றுள்ளோம்.
400–க்கும் மேற்பட்ட காளைகள் வரவாய்ப்பு உள்ளது. இதுபோல், 1000 மாடு பிடி வீரர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் எங்கள் ஊரில் மாடு பிடி வீரர்கள் இருக்கின்றனர். ஆனால் இந்த ஜல்லிக்கட்டில் அவர்களுக்கு அனுமதியில்லை. உள்ளூர் வீரர்கள், வெளியூர் வீரர்களுக்கு மரியாதை செய்யவேண்டும் என்பதால் அவர்கள் காளைகளை பிடிக்க அனுமதியில்லை. மேலும் இந்த விழா அரசுக்கு உட்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறும். இவ்வாறு கூறினர்.