தட்டம்மை தடுப்பூசி குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை சார்பில் தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசியதாவது:–
தட்டம்மை, ரூபெல்லா நோய்களை முற்றிலும் ஒழிப்பதற்காக தமிழக அரசு சார்பில் கடந்த 6–ந் தேதியில் இருந்து சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 9 மாதம் முடிவடைந்த குழந்தைகள் முதல் 15 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
ஏற்கனவே தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி போட்டு இருந்தாலும், கூடுதலாக ஒரு தவணையாக இந்த தடுப்பூசி போடுவது குழந்தைகளுக்கு நன்மை தரக்கூடியதாகும்.
வதந்திகளை நம்ப வேண்டாம்விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 876 அரசு பள்ளிகளிலும், 167 தனியார் பள்ளிகளிலும் சுமார் 1 லட்சத்து 72 ஆயிரத்து 789 குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டு அனைத்து குழந்தைகளும் நலமுடன் உள்ளனர். எனவே பொதுமக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்.
தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசியை தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே இதுவரை போடப்பட்டு வந்தது. இப்போது அரசே இலவசமாக இந்த நோய்களுக்கு பாதுகாப்பு தரும் தடுப்பூசியை போடுகிறது. இதற்காக பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப துணை சுகாதார நிலையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
கடும் நடவடிக்கைஎனவே இந்த தடுப்பூசி போடுவது குறித்து யாரேனும் தவறான தகவலை பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் டாக்டர்கள் ஆர்த்திகவுர், அமித், சாய்ராபானு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் சவுண்டம்மாள், ஜெமினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.