சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; 2 பேர் சாவு


சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; 2 பேர் சாவு
x
தினத்தந்தி 12 Feb 2017 4:30 AM IST (Updated: 12 Feb 2017 2:13 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சாத்தூர்,

வெடிவிபத்தில் 2 பேர் சாவு

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த ஏழாயிரம்பண்ணை அன்பின்நகரம் கிராமத்தில், கீழ செல்லையாபுரத்தை சேர்ந்த சுஜாதா என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையில் 40 அறைகள் அமைக்கப்பட்டு 70–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று காலை வழக்கம் போல் பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அப்போது அங்கு உள்ள ஒரு அறையில் திடீரென தீப்பிடித்து, பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. அந்த அறை இடிந்து விழுந்து தரைமட்டமானது.

இதில், அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த வல்லம்பட்டியை சேர்ந்த சேகர் (வயது 45), நடுச்சூரன்பட்டியை சேர்ந்த கணேசன்(50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

ரூ.5 லட்சம் நிவாரண உதவி

மேலும் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் பக்கத்து அறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த கீழசெல்லையாபுரத்தை சேர்ந்த மாரியம்மாள்(50) என்பவர் பலத்த தீக்காயம் அடைந்தார். அவர் உடல் கருகிய நிலையில் சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சாத்தூரில் இருந்து 2 தீயணைப்பு வண்டிகளில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ரூ.5 லட்சமும், இறுதிச்சடங்கு செலவுக்காக ரூ.50 ஆயிரமும் ஆலை நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டது.

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story