சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 2 பேர் பலி பெண் தொழிலாளி உடல் கருகினார்
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். பெண் தொழிலாளி உடல் கருகிய நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தாயில்பட்டி,
பட்டாசு ஆலை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஏழாயிரம்பண்ணை அன்பின்நகரம் கிராமத்தில் கீழ செல்லையாபுரத்தை சேர்ந்த சுஜாதா என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை உள்ளது. அனுமதி பெற்று நடத்தப்படும் இந்த ஆலையில் 40 அறைகள் அமைக்கப்பட்டு 70–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்று காலை தனித்தனி அறைகளில் பட்டாசு தயாரித்துக்கொண்டிருந்த போது 30–வது எண் கொண்ட அறையில் வல்லம்பட்டியை சேர்ந்த சேகர்(வயது45), நடுச்சூரன் பட்டியை சேர்ந்த கணேசன்(50) ஆகியோர் சரவெடியில் மருந்து ஏற்றும் பணியினை செய்து வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக தீப்பிடித்து பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.
இந்த விபத்தில் வேலைசெய்து கொண்டிருந்த இருவரும் அதே இடத்தில் பரிதாபமாக உயிர் இழந்தார்கள். மேலும் அந்த அறையும் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தின்போது வெடித்து சிதறிய பட்டாசுகள் பக்கத்து அறையில் இருந்த கீழசெல்லையாபுரத்தை சேர்ந்த மாரியம்மாள்(50) என்பவர் மீது விழுந்தது. இதில் அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. உடல் கருகிய நிலையில் அவர் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விசாரணைதகவல்அறிந்ததும் சாத்தூரில் இருந்து 2 தீயணைப்பு வண்டிகளில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மற்ற தொழிலாளர்கள் அனைவரும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், மாவட்ட வருவாய் அதிகாரி முத்துக்குமரன், சாத்தூர் கோட்டாட்சியர் கங்கையம்மாள், துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் ஆகியோரும் அங்கு வந்தனர். விபத்து நடந்த ஆலையினை அவர்கள் பார்வையிட்டனர்.
எதிர்ப்புவெடிவிபத்தில் உயிரிழந்த இருவரது உடலையும் பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவ மனைக்கு எடுத்துச்செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் உயிர் இழந்தவர்களின் உறவினர்கள் அங்கு விரைந்து வந்தனர். உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். அதைதொடர்ந்து நிவாரண உதவியாக ரூ.5 லட்சமும் இறுதிச்சடங்கு செலவுக்காக ரூ.50 ஆயிரமும் ஆலை நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டது. அதன்பின்னர் 2 பேரின் உடல்களும் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வெடிவிபத்து குறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.