கோர்ட்டுகளில் லோக் அதாலத் நிகழ்ச்சி
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற்றது.
ராமநாதபுரம்,
3 அமர்வுகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் அனைத்து கோர்ட்டுகளிலும் லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற்றது. ராமநாதபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் 3 அமர்வுகளாக இந்த லே£க்அதாலத் நடைபெற்றது. நிகழ்ச்சியை மாவட்ட நீதிபதி கயல்விழி தொடங்கி வைத்தார். முதன்மை குற்றவியல் நீதிபதி ஜெயராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஷ்குமார் வரவேற்று பேசினார்.
ராமநாதபுரம் கோர்ட்டில் முதன்மை மாவட்ட நீதிபதி கயல்விழி, முதன்மை குற்றவியல் நீதிபதி ஜெயராஜ் தலைமையில் ஒரு அமர்வும், நீதித்துறை நடுவர் கோர்ட்டு எண்–1 நீதிபதி இன்பகார்த்திக் தலைமையில் ஒரு அமர்வும், நீதித்துறை நடுவர் கோர்ட்டு எண்–2 நீதிபதி கண்ணன் தலைமையில் ஒரு அமர்வும் என மொத்தம் 3 அமர்வுகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் வக்கீல் உறுப்பினர்கள் சோமசுந்தரம், சம்சுதீன், விஜயராஜ், ராஜு, நம்புநாயகம், அன்புசெழியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ராமநாதபுரம் கோர்ட்டில் நடைபெற்ற லோக்அதாலத் நிகழ்ச்சியில், குடும்ப பிரச்சினை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், வங்கி கடன் வசூல் நிலுவை வழக்குகள் என சமரசம் செய்து கொள்ளக்கூடிய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
ராமநாதபுரம் கொத்த தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன். இவருடைய மனைவி முத்துசெல்வி. கடந்த 2010–ம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் 2012–ம் ஆண்டு முத்துசெல்வி தற்கொலை செய்து கொண்டாராம். இதன்பின்னர் இவர்களுடைய மகன் சிவா(6) உச்சிப்புளியில் உள்ள பாட்டி லெட்சுமி பராமரிப்பில் வாழ்ந்து வருகிறார். இதுதொடர்பாக ராஜேஷ்கண்ணன் தனது மகனை தன்னிடம் வழங்கக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை லோக் அதாலத் நிகழ்ச்சியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையில் சிறுவனை தந்தையுடன் அனுப்ப பாட்டி லெட்சுமி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்களாம்.
உத்தரவுஇந்த விசாரணையில், சிறுவன் சிவாவை மாதத்தில் ஒரு முறை சென்று பார்த்து கொள்ள அனுமதி வழங்கியதோடு, வரும் கல்வி ஆண்டு முதல் அவனின் கல்விச்செலவை ஏற்றுக்கொள்ளவும் அனுமதி வழங்கி முதன்மை மாவட்ட நீதிபதி கயல்விழி உத்தரவிட்டார். ராமநாதபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் தவிர, பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, ராமேசுவரம், திருவாடானை ஆகிய கோர்ட்டுகளிலும் லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளில் 3 ஆயிரத்து 500 வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளதாக மாவட்ட நீதிபதி கயல்விழி தெரிவித்தார்.