ஓ.பன்னீர்செல்வம், ஜெ.தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து கட்சி அலுவலகத்தில் கூட்டம்: அ.தி.மு.க. இளைஞர் பாசறை செயலாளர் உள்பட 80 பேர் கைது


ஓ.பன்னீர்செல்வம், ஜெ.தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து கட்சி அலுவலகத்தில் கூட்டம்: அ.தி.மு.க. இளைஞர் பாசறை செயலாளர் உள்பட 80 பேர் கைது
x
தினத்தந்தி 12 Feb 2017 4:00 AM IST (Updated: 12 Feb 2017 2:29 AM IST)
t-max-icont-min-icon

ஓ.பன்னீர்செல்வம், ஜெ.தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து கட்சி அலுவலகத்தில் கூட்டம்: அ.தி.மு.க. இளைஞர் பாசறை செயலாளர் உள்பட 80 பேர் கைது போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

திண்டுக்கல்

ஓ.பன்னீர்செல்வம், ஜெ.தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்த அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் உள்பட 80 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர்.

ஆலோசனை கூட்டம்

தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுவதற்காக காபந்து முதல்-அமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அவர்கள் 2 பேர் தலைமையிலும் தனித்தனியாக அணிகள் உருவாகி உள்ளன. மேலும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு கொடுப்பவர்களை கட்சியின் பொறுப்பில் இருந்து சசிகலா நீக்கி வருகிறார்.

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளராக இருக்கும் ஆனந்தகுமார் சமீபத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஜெ.தீபா ஆகியோரை நேரில் சந்தித்து தன்னுடைய ஆதரவை தெரிவித்தார். இதனால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், ஓ.பன்னீர்செல்வம், ஜெ.தீபா ஆகியோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேற்று மாலை 4 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார். இந்த ஆலோசனை கூட்டம் நத்தம் ரோட்டில் உள்ள அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

பரபரப்பு

இதனால், சசிகலாவின் ஆதரவாளர்களுக்கும், ஆனந்தகுமார் மற்றும் அவருக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதையொட்டி அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக புறப்பட்ட ஆனந்தகுமார் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெங்கில்ஸ்ரோடு பகுதியில் போலீசார் கைது செய்தனர். மொத்தம் 80 பேர் கைதானார்கள். பிறகு, தனியார் மண்டபத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். அங்கு ஓ.பன்னீர்செல்வம், ஜெ.தீபா ஆகியோருக்கு ஆதரவாக அவர்கள் கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story