6 கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்


6 கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 12 Feb 2017 4:30 AM IST (Updated: 12 Feb 2017 2:45 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் 6 கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

திருச்சி,

ஆலோசனை கூட்டம்

ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்ட நிலையில், திருச்சி மாவட்டத்தில் ஆங்காங்கே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் லால்குடி அருகே எம்.கண்ணனூர், எல்.அபிஷேகபுரம், மணப்பாறை அருகே ராயம்பட்டி, பொத்தமேட்டுப்பட்டி, திருவெறும்பூர் அருகே கூத்தைப்பார் மற்றும் இருங்களூர் ஆகிய 6 கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கேட்டு கலெக்டரிடம் விண்ணப்பித்துள்ளனர். இந்த 6 கிராமங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்து வதற்கான பாதுகாப்பு ஏற் பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு கலெக்டர் பழனிசாமி தலைமை தாங்கி பேசியதாவது:-

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள கிராமங் களில் வருவாய்த்துறை, போலீஸ் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மருத்துவ துறை மற்றும் பொதுப்பணி துறை அலுவலர்கள் ஆய்வு செய்து அரசு விதிமுறைகள் படி ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவ பரிசோதனை

ஜல்லிக்கட்டு நடத்தும் விழா அமைப்பாளர்கள், திறந்த வெளியில் ஜல்லிக் கட்டை நடத்திட வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளை கால்நடை பராமரிப்பு துறையினர் ஆய்வு செய்து தகுதி இல்லாத காளைகளை அனுமதிக்க கூடாது. பங்கேற்கும் வீரர்களுக்கு கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். தகுதியில்லாத வீரர்களை ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்க கூடாது. காளைகளை எந்த வகையிலும் துன்புறுத்த கூடாது. ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடங்களில் சரியான முறையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதா? என பொதுப்பணித்துறை யினர் ஆய்வு செய்து அனுமதிக்க வேண்டும். மேலும் திடலின் இரு பக்கங்களிலும் பார்வையாளர் அரங்கத்தை பிரிக்கும் வகையில் இரட்டை தடுப்புகள் அமைத்தல் வேண்டும். அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் சரியான முறையில் உள்ளதா? என வருவாய்த்துறையினரும், காவல்துறையினரும் ஆய்வு செய்ய வேண்டும்.

அடிப்படை வசதிகள்

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினரும் தயார் நிலையில் இருத்தல் வேண்டும். பொதுமக்கள் வந்து செல்லும் இடம், குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் குறித்தும் அனைத்து துறை அலுவலர்கள் இணைந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் ராஜராஜன்(ஸ்ரீரங்கம்), கணேஷ்குமார் (திருச்சி), மணிவண்ணன் (லால்குடி) மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் கிராம பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

Next Story