பெரம்பலூரில் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி


பெரம்பலூரில் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி
x
தினத்தந்தி 12 Feb 2017 4:15 AM IST (Updated: 12 Feb 2017 2:46 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் நடந்த மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பெரம்பலூர்,

ஸ்கேட்டிங் போட்டிகள்

பெரம்பலூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில் மாநில அளவிலான திறந்தவெளி ஸ்கேட்டிங் போட்டிகள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஸ்கேட்டிங் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த போட்டிகள் 6 வயதுக்கு உட்பட்டவர்கள், 6-8, 8-10, 10-12, 12-14, 14-16 வயது மற்றும் 16 வயதுக்கு மேற்பட்டோர் ஆகிய பிரிவுகளில் நடந்தன. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 760 ஸ்கேட்டிங் வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படுகிறதா? என்பது குறித்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராமசுப்பிர மணியராஜா அங்கு வந்து பார்வையிட்டு கேட்டறிந்தார்.

பரிசுகள்

போட்டிகளின்போது ஸ்கேட்டிங் வீரர்களை அவர்களது பெற்றோர்கள் மைதானத்திற்கு வெளியே நின்று கைதட்டியும், கோஷங்களை எழுப்பியும் உற்சாகப்படுத்தினர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த நடுவர்கள் போட்டியை நடத்தி சிறந்த வீரர்களை தேர்வு செய்தனர். பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள், பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், எம்.டி.ஆர். மருத்துவமனை டாக்டர் தங்கராஜ், ஸ்கேட்டிங் சங்க மாநில தலைவர் கஸ்தூரிராஜ், மாநில செயலாளர் சொக்கலிங்கம், மாவட்ட தலைவர் வழக்கறிஞர் அன்புதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாலக்கரை ரவுண்டானா அருகே சாலையில் ஸ்கேட்டிங் செய்யும் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். 

Next Story