பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 1,426 வழக்குகளுக்கு தீர்வு


பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 1,426 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 12 Feb 2017 4:15 AM IST (Updated: 12 Feb 2017 2:46 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நடந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 1,426 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

பெரம்பலூர்,

மக்கள் நீதிமன்றம்

உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு சமரச தீர்வு காணும் பொருட்டு மக்கள் நீதிமன்றம் நடந்தது. பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நஷீமாபானு தலைமை தாங்கினார். மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் சுரேஷ் விஸ்வநாத், தலைமை நீதித்துறை நடுவர் சஞ்சீவி பாஸ்கர், சார்பு நீதிபதி ஜெயந்தி, மாவட்ட உரிமையியல் நீதிபதி மகேந்திரவர்மா, கூடுதல் மகிளா நீதிமன்ற நீதித்துறை நடுவர் மோகனப்பிரியா, ஓய்வு பெற்ற தலைமை நீதித்துறை நடுவர் கண்ணையன் ஆகியோரை கொண்ட அமர்வானது நிலுவையிலுள்ள வழக்குகளை விசாரித்தது.

இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், வங்கிகளின் வரா கடன் வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில் 442 வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டு பாதிக்கப்பட்டோருக்கு ரூ.2 கோடியே 10 லட்சத்து 600 வழங்கப்பட்டது. இந்த மக்கள் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள், பொதுமக்கள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்டத்தில்...

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதிகளை உள்ளடக்கிய நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. இதில் 4,794 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் 984 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு பாதிக்கப்பட்டோருக்கு ரூ.2 கோடியே 84 லட்சத்து 8 ஆயிரத்து 962 வழங்கப்பட்டது. மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி (பொறுப்பு) லிங்கேஷ்வரன் தொடங்கி வைத்தார். 4 சிறப்பு அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு நிலுவையிலுள்ள வழக்குகள் விசாரிக்கப்பட்டன. அரியலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ரவி, சார்பு நீதிபதி நாகராஜன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சீனிவாசன் உள்ளிட்ட நீதிபதிகள் பங்கேற்று வழக்குகளை விசாரித்து தீர்வு கண்டனர்.

இதேபோல் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் சிறப்பு அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வழக்கு விசாரணை நடந்தது. அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள், பொதுமக்கள் இந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பயன்பெற்றனர். அரியலூர் மற்றும்பெரம்பலூர் மாவட்டங்களில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 1,426 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story