தட்டம்மை ருபெல்லா தடுப்பூசி விழிப்புணர்வு வாகன பிரசாரம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


தட்டம்மை ருபெல்லா தடுப்பூசி விழிப்புணர்வு வாகன பிரசாரம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 12 Feb 2017 4:30 AM IST (Updated: 12 Feb 2017 2:46 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் தட்டம்மை ருபெல்லா தடுப்பூசி விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில்,

பொது சுகாதாரத்துறையும், அரிமா சங்கமும் இணைந்து நடத்தும் தட்டம்மை ருபெல்லா தடுப்பூசி முகாமுக்கான விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது.

கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கொடியசைத்து வாகன பிரசாரத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

தடுப்பூசி முகாம்

வருகிற 28-ந் தேதி வரை, 9 மாதம் முடிந்த குழந்தைகள் முதல் 15 வயது வரை உள்ள மாணவ- மாணவிகள் அனைவருக்கும் தட்டம்மை ருபெல்லா தடுப்பூசி போடப்பட உள்ளது.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார், உறைவிடப் பள்ளிகளிலும், பள்ளி செல்லா குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களிலும் மற்றும் சிறப்பு தடுப்பூசி மையங்களிலும் 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு தட்டம்மை - ருபெல்லா தடுப்பூசி போடப்பட உள்ளது.

25 ஆயிரம் பேருக்கு ஊசி

இதற்கு முன் இவ்வகை ஊசி போடப்பட்டிருந்தாலும் தடுப்பூசி முகாம் நடைபெறும் நாட்களில் தடுப்பூசி போடப்பட வேண்டும்.

குமரி மாவட்டத்தில் மொத்தம் 1,224 பள்ளிகள், 1,401 சத்துணவு மையங்களில் நடைபெறும் இந்த தடுப்பூசி முகாம் மூலம் 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள 4 லட்சத்து 44 ஆயிரத்து 603 குழந்தைகள் மற்றும் மாணவ- மாணவிகள் பயன் அடைவார்கள். இதற்கு தேவையான 5 லட்சம் தடுப்பூசிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை இம்மாவட்டத்தில் 25 ஆயிரத்து 34 குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் டாக்டர் மாதவன்பிள்ளை, நகர்நல அதிகாரி வினோத்ராஜா, தாய்சேய் நல அதிகாரி பியூலா, லயன்ஸ் சங்க ஆளுனர் சுதந்திரலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். 

Next Story